எரிபொருள் விலையேற்றத்துக்கமைய பேரூந்து கட்டணத்தை திருத்தம் செய்ய வேண்டிய தேவை தற்போது இல்லை. ஆகவே பேரூந்து கட்டணத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எரிபொருள் விலையேற்றத்துக்கு அமைய பேரூந்து கட்டணத்தை 20 முதல் 30 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் என தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து ஆணைக்குழு இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
2002.06.12 ஆம் திகதி அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தேசிய பேருந்து கட்டண கொள்கைக்கமைய 2002 ஜூலை மாதம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் பேரூந்து கட்டணம் திருத்தம் செய்யப்படுகிறது.
அந்த பேரூந்து கட்டண கொள்கைக்கமைய வருடாந்த பேரூந்து கட்டண திருத்தம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 01 ஆம் திகதி அறிவிக்கப்படும்.
அத்துடன் வருடத்தில் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் டீசலின் விலை சடுதியாக உயர்வடைந்தால் அந்த விலை உயர்வு மொத்த கிலோமீற்றர் ஒரு அலகுக்கான செலவு 4 சதவீதத்தை காட்டிலும் உயர்வடைந்தால் டீசல் விலை அதிகரிக்கப்பட்டு ஒரு மாதகாலப்பகுதிக்குள் இடைக்கால கட்டண திருத்தம் ஒன்று அமுல்படுத்தப்பட வேண்டும்.
நடைமுறையில் உள்ள பேரூந்து கட்டணம் 2023.09.03 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்டது.முன்னெடுக்கப்பட்ட மதிப்பாய்வுகளுக்கு அமைய 2023.09.01 ஆம் திகதி காலப்பகுதியில் ஒரு லீற்றர் லங்கா சுப்பர் டீசலின் விலை 341 ரூபாவாக இருந்தது.
2024.01.01 ஆம் திகதி அதிகாலை எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டு ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 358 ரூபாவாக புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேசிய பேருந்து கட்டண கொள்கைக்கு அமைய மொத்த கிலோமீற்றருக்கான பயணத் தூரம் நூற்றுக்கு 2.0 சதவீதத்தால் உயர்வடைய வேண்டும்.ஆகவே தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலைக்கு அமைய பேரூந்து கட்டணத்தை திருத்தம் செய்ய வேண்டிய தேவை தற்போது இல்லை. ஆகவே பேரூந்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தபடமாட்டாது.