பேருவளையிலிருந்து கடலுக்கு சென்று விபத்துக்குள்ளாகி 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காலி கடற்கரையிலிருந்து 30 மைல்கல் தூரத்தில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் சிக்கிய மேலும் ஒரு மீனவரை கடற்படையினர் காப்பாற்றியுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் கமன்டர் தினேஷ் பண்டார குறிப்பிட்டார்.
நேற்று (12) காலை தங்களின் படகு கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக மீட்கப்பட்ட குறித்த மீனவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மீனவர் சிகிச்சைக்காக கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளாகிய படகில் 7 மீனவர்கள் பயணித்துள்ளதுடன், அதில் இருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கடற்படையினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.