பேரழிவில் இருந்து தங்களை காக்க வேண்டி அமேசான் மலைக்காடுகளில் இருக்கும் பழங்குடியின மக்கள் ஒன்றுகூடி பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர்.
தென் அமெரிக்காவில் பிரேசில் உட்பட 9 நாடுகளில் பரவியுள்ள அமேசான் காடு உலகின் நுரையீரலாக வர்ணிக்கப்படும் நிலையில், தற்போது அங்கு ஏற்பட்டுள்ள காட்டு தீ உலகிற்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து தங்களது நாட்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள தீயை கட்டுப்படுத்தும் பணியில் பிரேசில் ஈடுபட்டு வருகிறது.
அதன் அண்டை நாடான பொலிவியாவும் தங்கள் நாட்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அமேசான் காட்டில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த 1 மாதமாக பற்றி எரிந்து வரும் மலைக்காடுகளில் 400 இனங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது ஏற்பட்டிருக்கும் காட்டுத்தீயால் இவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது.
மேற்கு பிரேசிலில் இருக்கும் பியோஜியோ கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் காட்டுத்தீயில் இருந்து தங்களை காக்க வேண்டி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
அமேசான் காடுகளில் கடந்த வாரம் 48 மணி நேரத்தில் மட்டும் 2,500 இடங்களில் தீ பற்றியுள்ளது. அமேசான் காடுகள் எரிவதால் ஏற்பட்ட புகையின் தாக்கம் 1,700 மயில் தொலைவில் உள்ள முக்கிய நகரமான சாபோலோவை இருளில் மூழ்கடித்துள்ளது.
இந்த புகை காற்றில் கலந்து கார்பன் துகள்களையும், கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு போன்ற தீங்கு விளைவிக்கும் நச்சு வாயுக்கள் வெளியேறி வருகிறது.