தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புத்தூரில் 1991 இல் இடம்பெற்ற முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலைச் சம்பவத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஏழு அரசியல் கைதிகளில் ஒருவரான பேரறிவாளன் , 31ஆண்டுகள் நீடித்த சிறைவாசத்தின் பின் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்.
தன்னைவிடுதலை செய்யக்கோரி 2016 ஆம் ஆண்டு பேரறிவாளன் இந்திய உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுமீதான விசாரணையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் பேரறிவாளனின் விடுதலை விடயத்தில் தவறு நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் கடந்த மே 18 அன்று அரசமைப்புச் சட்டத்தின் 142 ஆவது பிரிவின் கீழ் அவரை விடுதலை செய்து தனது இறுதித் தீர்ப்பை அறிவித்திருந்தது .
ஏற்கனவே வீட்டு விடுப்பில் (பரோலில்) சிறையில் இருந்து வெளியே வந்திருந்த பேரறிவாளன் பின்னர், நிபந்தனைகளுடனான பிணையில் விடுவிக்கப்பட்டார். இவ்வாறான நிலையிலேயே தற்போது உச்ச நீதிமன்றம் இவரை குறித்த வழக்கிலிருந்து முற்றுமுழுதாக விடுதலை செய்துள்ளது.
மூன்று தசாப்தகால சட்ட போராட்டத்தின் பின்னரான பேரறிவாளனின் இந்த விடுதலை தாயாரான அற்புதம்மாளின் ஓய்வொழிச்சலற்ற உழைப்பினாலும் செங்கொடி என்ற சமூகப்பற்றாளினியின் ஒப்பற்ற உயிர்த்தியாகத்தினாலும் இன்று சாத்தியமாகியுள்ளமை மறுக்க முடியாத உண்மை. இவ்விடுதலையை தமிழ் உலகம் மாத்திரமன்றி மனித நேயம் கொண்ட பலதரப்பினரும் வரவேற்று நிம்மதியடைந்திருக்கின்றார்கள் என்று சொல்லலாம்.
இதே 31 ஆண்டுகளாக தந்தை ராஜீவ் காந்தியின் இழப்பை அனுபவித்துக் கொண்டிருக்கும் ராகுல் காந்தி பேரறிவாளனின் விடுதலை தொடர்பில் ‘‘ எனது தந்தை எனக்கு மன்னிக்கும் மனப்பான்மையை ஊற்றியே வளர்த்துள்ளார்’’ என்று கருத்து கூறியுள்ளார் .
ஆனாலும் கூட ஒருசில கட்சி அரசியலாளர்கள் தம் பங்கிற்கு விடுதலையை ஆட்சேபித்து ஆங்காங்கே அரசியல் கோஷமிட்டுள்ளார்கள் . இங்கு போற்றுவோரும் தூற்றுவோரும் புரிந்துகொள்ளக் கடவது என்னவென்றால் விடுதலை செய்யப்பட்டுள்ள பேரறிவாளன் கைது செய்யப்பட்டு வெறுமனே ஓரிரு வருடங்களில் விடுவிக்கப்படவில்லை. மனித வாழ்நாளின் மிகப்பெறுமதி வாய்ந்த 31 ஆண்டுக்கால தண்டனையை அணுவணுவாக அனுபவித்ததன் பின்னரே விடுதலை செய்யப்பட்டுள்ளார் .
19 வயது இளைஞனாக சூழ்நிலை கைதியாக்கப்பட்ட பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலை விவகாரம் நாட்டினுடைய சட்டம் நீதிக்கு அப்பால் அரசியல் மயப்படுத்தப்பட்டு பந்தாடப்பட்டிருக்கின்றது.
இதன் காரணமாகவே பேரறிவாளன் இளமை முழுவதையும் சிறைக்குள் தொலைத்து தனது 50 ஆவது வயதில் நிறைந்த நோயாளியாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவ்விடத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மிக நீண்ட காலமாக இலங்கையின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளது நிலைமையும் சற்று திரும்பி பார்ப்பது அவசியம்.
1996 இல் இலங்கை மத்திய வங்கி மீதான குண்டுத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் தனது 19 வயதில் கைது செய்யப்பட்ட பார்த்தீபன் கடந்த 26 ஆண்டுகளாக கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்றார். ‘‘எனக்கு கொள்ளி வைக்கவாவது என் பிள்ளை வீடு வந்து சேருவானா…?’’ என்று ஏக்கப்பெருமூச்செறிந்தபடி நல்லூரின் வீதியில் குந்தி கனவு கண்டுகொண்டிருக்கிறார் பார்த்தீபனின் 89 வயது தாயாரான யோகேஸ்வரி அம்மா.
அற்புதம்மாளைப் போல இந்த அம்மாவுக்கு அரசியல் கட்சிகளின் அலுவலகங்களுக்கோ ஆட்சியாளர்களின் பணி இடங்களுக்கோ படியேறி விடுதலை கேட்க வயோதிபம் இடமளிக்கவில்லை. பார்த்தீபன் உள்ளிட்ட நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்கவேண்டும் எனக் கோரி உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த மாணவன் இரா. செந்தூரன் நல்லாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் எழுதிவிட்டு தொடருந்தில் பாய்ந்து தன்னுயிரை அர்ப்பணித்திருந் தார். ஆனபோதிலும் செங்கொடியின் தியாகத்தை இந்திய அரசு திரும்பி பார்த்த அளவுக்கு செந்தூரனின் உயிர் அர்ப்பணிப்பை இலங்கை அரசு கண்டுகொள்ளவில்லை.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மீதான குண்டுத்தாக்குதல் தொடர் பில் கைது செய்யப்பட்ட இந்து மத குரு உட்பட மூன்று தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 22 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். இவ்வாறிருக்கு மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளன்று சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து தனது வீட்டில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார் . அதுமட்டுமன்றி வெறுப்புக்கு பதிலாக அன்பை காட்டுவோம் பழிவாங்குவதற்கு பதிலாக மன்னிப்போம் என்று தெரிவித்துள்ளார். இது ஒரு வகையில் ராகுல் காந்தியின் மன மாற்றத்தை ஒத்து நிற்கின்றது.
மொத்தத்தில் காலிமுகத்திடல் போராட்ட க்களத்தில் நினைவேந்தல் அனுஷ்டித்த விடயம் முதல் கொண்டு இந்த ஆண்டின் மே–18 பல மனமாற்றங்களுக்கு வித்திட்டிருப்பதாகவே எண்ணத் தோன்று கின்றது.
எனவே அரசாங்கம் இப்போதாவது சந்தர்ப்ப சூழ்நிலை கைதிகளாக தசாப்
தங்கள் கடந்த சிறைவாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில்
விடுதலை செய்வதற்கு முன்வரவேண்டும். இதன்மூலம் இன, சமூக, நல்லெண்ண, நம்பிக்கையை ஏற்படுத்தி பொருளாதார பின்னடைவு கண்டுள்ள இந்நாட்டை ஒற்றுமையுடன் கைகோர்த்து மீளக்கட்டி யெழுப்ப முடியும் என்று நம்பலாம்.
விவேகானந்தனூர் – சதீஸ். இப் பத்தியின் எழுத்தாளர், அரசியல் கைதியாக விடுதலையை நோக்கி காத்திருப்பவர்.