பேய் மிளகாய் பர்கர் உண்டவர் தொண்டையில் ஓட்டை.. ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை…
அமெரிக்காவில் அதிக காரமான மிளகாய் தின்றவர் தொண்டையில் ஓட்டை விழுந்தது. இதையடுத்து அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவை சேர்ந்த 47 வயது நபர் ஒருவர் மிக அதிக காரமான சிவப்பு மிளகாயினால் தயாரிக்கப்பட்ட ‘பர்கர்’ உணவை சாப்பிட்டார்.
அதை சாப்பிட்ட சில வினாடிகளில் அவரது தொண்டையும், வயிறும் ‘கப… கப…’ என தீயாக எரிந்தது. தொடர்ந்து வாந்தியும் எடுத்தார்.
இதனால் அலறித்துடித்த அவர் வலி தாங்காமல் தரையில் விழுந்து அழுது புரண்டார். உடனே அவரை ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவரது தொண்டையில் ‘ஸ்கேன்’ எடுத்து பார்த்தபோது ஒரு அங்குல அளவுக்கு ஓட்டை விழுந்து இருக்கிறது.
மிளகாயின் அதிக வேகமான காரம் அவரது தொண்டையை அரித்து புண்ணாக்கி ஓட்டை விழ வைத்து விட்டது. சிகிச்சைக்காக 14 நாட்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு டியூப் மூலம் உணவு செலுத்தப்பட்டது.
தொண்டையில் ஓட்டை உண்டாக்கிய அந்த மிளகாய் இந்தியாவில் விளையக்கூடியது. இதற்கு ‘பேய்’ மிளகாய் என்ற பெயரும் உண்டு.