பெற்ற வெற்றியை ஒரு சதத்துக்கும் பெறுமதியற்ற இடைக்கால அரசாங்கத்துக்காக விற்க முடியாது எனவும் இதற்கு ஒரு போதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க மாட்டாரெனவும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
அரச பயங்கரவாதம், அரச வன்முறை ஆகியவற்றை தோற்கடித்து 2015 ஜனவரி 08 ஆம் திகதி பெற்றுக்கொண்ட மாபெரும் மக்கள் ஆணையை விட்டுக் கொடுக்க மாட்டோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அநுராதபுரம், பலாகல பிரதேசத்தில் மதீனா நகர் முன்மாதிரிக் கிராமத்தை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளராக இருந்துகொண்டு கட்சிக்கு முன் நாட்டைப் பற்றி சிந்தித்தார். அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பெருமளவு நேசித்தவர். எனினும் அதற்கு மேலாக நாட்டை நேசித்தார்.
நாட்டில் இடம்பெற்ற மோசமான அழிவைக் கண்டு நாட்டின் மீதுள்ள அக்கறையினால் அப்பதவியிலிருந்து விலகி பொது வேட்பாளராக மாபெரும் சவாலை ஏற்றுக்கொண்டார். இவ்வாறு வெற்றிகொண்ட அரசாங்கத்தை இலகுவாக விட்டுக் கொடுக்க ஜனாதிபதி முன்வர மாட்டார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.