ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து பெற்றோலியத்துறை தொழிற்சங்க ஊழியர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஆகஸ்ட் 01 ஆம் திகதி மீண்டும் இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறும் வரையில் தமது போராட்டத்தைக் கைவிடுவதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்தப் போராட்டம் கடந்த 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெற்றோலியத்துறை கூட்டுத்தாபன ஊழியர்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு வந்தால் மாத்திரமே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த தான் இடமளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கைக்கு நேற்று மாலை வரை ஊழியர்கள் சங்கம் எந்தவொரு பதிலையும் வழங்கவில்லையெனவும், பின்னர் போராட்டத்தைக் கைவிடத் தீர்மானித்துள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
பிரச்சினை இருப்பின், அவற்றைப் பேச்சுவார்த்தையைக் கொண்டு தீர்வுகாண முடியும் எனவும், மக்களின் அசௌகரியத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக சேவைக்கு வருகை தருமாறும் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது.