கொரோனாவைத் தொடர்ந்து தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது குரங்கு அம்மை. அதாவது ‘மங்கி பொக்ஸ்‘.
உலகம் முழுவதும் தற்போதுவரையில் 237 நோயாளிகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகின்றது. கடந்த 25ஆம் திகதி நிலைவரப்படி, உலகம் முழுவதும் 21 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளதாகவும் 237 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செக்கோஸ்லோவாக்கியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளில் குரங்கு அம்மை பதிவாகியுள்ளன.
குரங்கு அம்மையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் உயரும் என எதிர்பார்ப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறுகிறது. சில நாடுகளில் உள்ள சுகாதார அதிகாரிகள் இது மிகவும் கடுமையானது அல்ல என்று கூறுகின்றனர். ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் கனடா ஆகிய நாடுகள் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெல்ஜியம் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களை 21 நாட்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன. வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 முதல் 21 நாட்களுக்குள் அடிப்படை அறிகுறிகள் தென்படுவதாக தற்போது தெரியவந்துள்ளது. இந்த நோய் முதன்மையாக உமிழ்நீர் மற்றும் உமிழ்நீர் துளிகள் மூலமாகவும், உடலுறவு மூலமாகவும் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுவதாக சுகாதார நிபுணர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
மங்கி பொக்ஸால் பாதிக்கப்பட்டவரின் ஆடைகள், படுக்கை மற்றும் அவர் பயன்படுத்திய துணி வகைகள், நோயாளியின் தோலில் கொப்புளங்கள் போன்றவற்றின் மூலம் குரங்கு அம்மை பரவும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ‘குரங்கு அம்மை’ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக காய்ச்சல், தலைவலி, கால் பிடிப்புகள், நிணநீர் கணுக்கள் வீங்குதல், சளி போன்றவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சின்னம்மை தடுப்பூசி குரங்கு காய்ச்சலுக்கு எதிராக 85 சதவீத நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது என்பது தெரியவந்ததையடுத்து, ஜேர்மனி உட்பட பல நாடுகள் இம்வானெக்ஸ் தடுப்பூசியை சிறிய அளவில் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளன. ஜேர்மனி ஏற்கனவே சுமார் 40,000 தடுப்பூசிகளை முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அரியவகை நோயானது வெளிநாட்டு பயணிகள் ஊடாக இலங்கைக்கு வரும் அபாயம் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய்த்தடுப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர கூறுகையில், இந்த நோயை பரிசோதித்து கண்டறியும் அனைத்து வசதிகளும் இந்த பிரிவில் உள்ளன. சோதனைக்குத் தேவையான இரசாயனங்கள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வாரம் தனது அலகுக்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு பரவிய இந்நோய் தற்போது உலகின் பிற பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக மேற்கத்திய சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நோய் தற்போது ஐரோப்பா, இங்கிலாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின், ஜேர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், நெதர்லாந்து, இத்தாலி மற்றும் சுவீடன் மற்றும் அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த நோய் இன்னும் ஆராய்ச்சியில் இருந்தாலும், அதன் அறிகுறிகளில் காய்ச்சல், தலைவலி, வீக்கம், தசைவலி மற்றும் கால் பிடிப்புகள் ஆகியவை அடங்கும். வைரஸின் அறிகுறிகள் முகத்தில் இருந்து பாதங்கள் வரை பரவுவதாக அறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் விலங்குகளுக்கு எளிதில் பரவும் என முதலில் கருதப்பட்டாலும், அதன் தன்மையில் ஏற்பட்ட மாற்றங்களால் இது மனிதர்களுக்கும் பரவியிருக்கலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.