2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களின் வெற்றிப்பெற்று பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிப்போம். எதிர்கட்சித் தலைவர் பதவி வகிப்பதற்கும், எதிரணி பக்கம் செல்வதற்குமான நிலைமை எமக்கு ஏற்படாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கிரிந்திவெல பகுதியில் செவ்வாய்க்கிழமை (26) மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
போதைப்பொருள் ஒழிப்புக்காக முன்னெடுக்கப்படும் விசேட பொலிஸ் சுற்றிவளைப்புகள் வரவேற்கத்தக்கது.போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாக காணப்படுகிறது.ஆகவே எவ்வழியிலாவது போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரத்தை இல்லாதொழிக்க வேண்டும்.
2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களின் வெற்றிப் பெற்று பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிப்போம்.கட்சியை மறுசீரமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.எதிரணி பக்கம் செல்வதற்கும்,எதிர்க்கட்சித் தலைவர் பதவி வகிப்பதற்குமான நிலைமை எமக்கு ஏற்படாது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் எம்முடன் மீண்டும் ஒன்றிணையலாம்.தற்போது விலகியுள்ளவர்கள் அனைவரும் எம்முடன் இணக்கமாக செயற்பட்டவர்கள் ஆகவே அவர்கள் தாராளமாக எம்முடன் ஒன்றிணையலாம்.
எம்மீது சேறு பூசுவதையும்,பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதையும் ஒரு தரப்பினர் தமது அரசியல் கொள்கையாக கொண்டுள்ளார்கள்.போலியான குற்றச்சாட்டுக்கள் பெற்றிப் பெறும் சந்தர்ப்பத்தில் நாடு தோல்வியடைந்தது.2015 ஆம் ஆண்டு அவ்வாறான தன்மையே தோற்றம் பெற்றது.ஆகவே மக்களில் தெளிவுடன் செயற்பட வேண்டும் என்றார்.