மட்டக்களப்பு மாநகரசபையின் கடந்த மாதத்துக்கான ஒத்திவைக்கப்பட்ட சபை அமர்வு நேற்றைய தினம்(28) மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் மாநகரசபை நகர மண்டபத்தில் கொரோனா நிலைமைகளைக் கருத்திற்கொண்டு சமூக இடைவெளியுடன் இடம்பெற்றது.
இவ்வமர்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள், மாநகரசபை பிரதி ஆணையாளர், பொறியியலாளர், சபையின் பதில் செயலாளராகச் செயற்படும் நிருவாக உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சபைக்குரிய சம்பிரதாயங்களுடன் இடம்பெற்ற இச்சபை அமர்வில் முதல்வரின் தலைமையுரையின் பின்னர் நிதிக் குழுவின் சிபாரிசுகள், முன்மொழிவுகள் சபை அனுமதிக்காக முதல்வரால் சபைக்கு சமர்ப்பிக்கப்படுகின்ற வேளையில் அதனுடன் தொடர்பாக சபையில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றது.
குறிப்பாக இன்றைய தினமும் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் தொடர்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் குறித்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே காரசாரமான கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் நஞ்சற்ற உற்பத்திகளை அதிகரிப்பதற்கான சேதன பசளை மூலமான உற்பத்தியை அதிகரிப்பதற்கு மாநகரசபையும் ஒத்துழைப்பு வழங்குவதற்கான வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மாநகர முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் கடந்த ஆண்டுக்கான வேலைத்திட்டங்கள் முடிவுறுத்தப்படாமல் இருப்பதன் காரணமாக குறித்த வேலைத்திட்டங்களை விரைவாக முடித்ததன் பின்னர் இவ்வாண்டுக்கான திட்டங்களை விரைவாக ஆரம்பிப்பதற்கு சில திட்டங்களை மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சனசமூக நிலையங்கள் ஊடாக முன்னெடுப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
வட்டாரங்களில் உள்ள உறுப்பினர்களின் முழுமையான ஆலோசனைகளைப்பெற்று குறித்த வட்டாரங்களில் முடிக்கப்படாது உள்ள மேற்படி திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவது குறித்து இங்கு ஆராயப்பட்டவேளையில் இது தொடர்பில் காரசாரமான கருத்துகளும் பரிமாறப்பட்டன.
அத்துடன், மட்டக்களப்பு மாநகர சபையால் சிறுவர் நேய மாநகர திட்டத்தின் கீழ் பெய்லி வீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சிறுவர் பூங்கா குறித்து தவறான கருத்துகள் பரிமாறப்பட்டுவருவதாக இங்கு குற்றச்சாட்டப்பட்டதுடன் அது தொடர்பில் மாநகர முதல்வரினால் விளக்கமளிக்கப்பட்டது. குறித்த திட்டமானது முற்றுமுழுதாக மாநகரசபையினால் செறி நிறுவனம் மற்றும் ஐநா சிறுவர் நிதியம் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டமெனவும் அதற்கு எந்த தனிமனிதருக்கும் தொடர்பில்லையெனவும் முற்றுமுழுதாக மாநகரசபைக்கு சொந்தமானது எனவும் இங்கு மாநகர முதல்வரினால் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், மாநகர சபை உறுப்பினர் அசோக் அவர்களால் கொண்டுவரப்பட்ட அரசாங்கத்தின் நிதியின் கீழ் சேற்றுக்குடா தொடக்கம் வலையிறவு வரையான வீதியில் 1.5மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் LED மின்குமிழ்கள் பொருத்தும் திட்டம் சபையில் அங்கீகரிக்கப்பபட்டத்துடன் குறித்த திட்டத்தினை அரசாங்கத்திடமிருந்து பெற்று தந்தமைக்காக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.