ஜாவா லேன் கழகத்துக்கும் சோண்டர்ஸ் கழகத்துக்கும் இடையில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான சம்பயின்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டி 1 – 1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
அப் போட்டியில் பெனல்டி ஒன்று உட்பட ஏகப்பட்ட கோல் போடும் வாய்ப்புகளை ஜாவா லேன் தவறவிட்டமை அவ்வணிக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.
மறுபக்கத்தில் சோண்டர்ஸ் கழகமும் கோல் போடும் பல வாய்ப்புகளைத் தவறவிட்டது.
போட்டியின் 27ஆவது நிமிடத்தில் ஜாவா லேன் கழகத்துக்கு கிடைத்த பெனல்டியை வலிய எடுத்த சிரேஷ்ட வீரர் மாலக்க பேரேரா அதனைத் தவறவிட்டார்.
அவர் உதைத்த பெனல்டியை நோக்கி சரியான திசையில் தாவிய சிரேஷ்ட கோல்காப்பாளர் அசன்க விராஜ் பந்தை தடுத்து இரசிகர்களின் பலத்த பாராட்டைப் பெற்றார்.
இடைவேளைவரை இரண்டு அணிகளும் கோல் போட்டிருக்கவில்லை.
இடைவேளைக்குப் பின்னர் இரண்டு அணியினரும் கோல் போடுவதற்கு கடுமையாக முயற்சித்தனர்.
போட்டியின் 63ஆவது நிமிடத்தில் மொஹமத் சப்ரான் பரிமாறிய பந்தை மாலக்க பெரேரா கோலாக்கியதன் மூலம் ஜாவா லேன் முன்னிலை அடைந்தது.
இந்த கோலினால் உற்சாகம் அடைந்த ஜாவா லேன் கோல் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சித்தது. ஆனால் அது கைகூடவில்லை.
மறுபுறத்தில் கோல் நிலையை சமப்படுத்த சோண்டர்ஸ் கடுமையாக முயற்சித்தது.
போட்டியின் 83ஆவது நிமிடத்தில் டிலான் டி சில்வா உயர்வாகப் பரிமாறி பந்தைப் பெற்றுக்கொண்ட 19 வயதுடைய வீரர் பெத்தும் கிம்ஹான அலாதியான கோல் ஒன்றைப் போட்டு சோண்டர்ஸ் சார்பாக கோல் நிலையை சமப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து போட்டியில் விறுவிறுப்பு ஏற்பட்டபோதிலும் இரண்டு அணிகளாலும் வெற்றி கோலை போட முடியாமல் போக ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
நிகம்போ யூத் வெற்றி
காலி விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் பொலிஸ் கழகத்தை எதிர்த்தாடிய நிகம்போ யூத் கழகம் 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்த வருட சம்பியன்ஸ் லீக்கில் நிகம்போ யூத் ஈட்டிய இரண்டாவது வெற்றி இதுவாகும். அதேவேளை, மிக மோசமாக விளையாடி வரும் பொலிஸ் கழகம் தனது 3ஆவது நேரடி தோல்வியைத் தழுவியது.
ஆட்டத்தின் முதலாவது பகுதியில் 5 நிமிட இடைவெளியில் போடப்பட்ட 2 கோல்கள் நிகம்போ யூத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது.
போட்டியின் 22ஆவது நிமிடத்தில் அனுபவசாலியான மூத்த வீரர் கிறிஸ்டின் பெர்னாண்டோ மிக இலாவகமாக கோல் போட்டு நிகம்போ யூத்தை முன்னிலை அடையச் செய்தார்.
5 நிமிடங்கள் கழித்து நிகம்போ யூத் கழகத்தின் 2ஆவது கோலை அணித் தலைவர் நிலுக்க ஜனித் புகுத்தினார்.
அதன் பின்னர் வெற்றியைத் தக்கவைத்துக்கொள்ள நிகம்போ யூத்தும் தோல்வியைத் தவிர்க்க பொலிஸும் கடுமையாக முயற்சித்தன.
போட்டியின் 90ஆவது நிமிடத்தில் பொலிஸ் சார்பாக ஷிஷான் ப்ரபுத்த ஆறுதல் கோல் ஒன்றைப் போட்டார்.
சொலிட் – நியூ ஸ்டார் வெற்றி தோல்வி இல்லை
குருநாகல், மாளிகாபிட்டி மைதானத்தில் நடைபெற்ற சொலிட் கழகத்துக்கும் நியூ ஸ்டார் கழகத்துக்கும் இடையிலான போட்டி கோல் எதுவும் போடப்படாமல் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
இரண்டு அணியினரும் கோல் போடுவதற்கு எடுத்த முயற்சிகள் யாவும் கைகூடாமல் போயின.
அப் போட்டியில் பிரதான மத்தியஸ்தர் மற்றும் உதவி மத்தியஸ்தர்களின் தீர்ப்புகள் கடும் விமர்சனத்துக்குள்ளானது.
இரண்டு சந்தர்ப்பங்களில் தங்களால் போடப்பட்ட கோல்கள் உதவி மத்தியஸ்தர்களினால் ஓவ்சைட் என நிராகரிக்கப்பட்டதாகவும் ஒரு பெனல்டியை பிரதான மத்தியஸ்தர் மறுத்ததாகவும் நியூ ஸ்டார் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
சம்பியன்ஸ் லீக் போன்ற கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு தரம் வாய்ந்த மத்தியஸ்தர்களை நியமிப்பது அவசியம் என நியூ ஸ்டார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.