தென்னாபிரிக்காவில் பெண்கள் பல ஆண்களை திருமணம் செய்யலாம் என்ற அரசாங்கத்தின் முன்மொழிவு தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவின்படி, ஒரே நேரத்தில் பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை திருமணம் புரிவது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது.
இந்தத் சட்டத்திற்கு எதிராக தென்னாபிரிக்காவின் பழமைவாதக் குழுக்கள் தங்கள் போராட்டங்களைத் தொடங்கியுள்ளன.
திருமணச் சட்டங்களில் மே மாதம் மாற்றத்தை கொண்டு வர இருப்பதாக அரசு தெரிவித்தபோது இதுகுறித்து சமூக ஊடகங்களிலும் அங்கு பலதரப்பட்ட கருத்துக்கள் எழுந்தன.
தென்னாபிரிக்காவில் பெண்கள் பல மணம் புரிவதை சட்டபூர்வமாக்கும் முன்மொழிவு ஒன்று அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் சாதகமான அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதாவது இந்த விஷயம் தொடர்பான பொது விவாதத்திற்கான அழைப்புதான் இந்த அறிக்கை.
ஏற்கனவே அங்கு ஆண்கள் பல திருமணங்கள் புரிவது சட்டபூர்வமானது தான். என்றாலும் தற்போது பெண்கள் பல கணவர்களை கொண்டிருக்கலாம் என்ற இந்த முன்மொழிவு பல எதிர்மறை விமர்சனங்களை கிளப்பியுள்ளன.
தென்னாபிரிக்காவில் உள்ள தற்போதைய திருமணச் சட்டம் பாலின பாகுபாடுடன் உள்ளது. எனவே அதில் சமத்துவத்தை கொண்டு வர சட்டத்தை சீரமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆர்வலர்கள் முன்மொழிந்தனர்.
இருப்பினும் பெண்கள் பல கணவர்களை கொண்டிருக்கலாம் என்ற இந்த முன்மொழிவை கன்செர்வேட்டிவ்ஸ் என்று அழைக்கப்படும் பழமைவாத குழுக்களை சேர்ந்தவர்கள், பல்வேறு மத தலைவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
தென்னாபிரிக்காவில் இதை பெரிதும் எதிர்ப்பவர்களில் அந்நாட்டின் ரியாலிட்டி ஷோ நட்சத்திரமான முசா செலேகு நான்கு திருமணம் செய்தவர் என்பது ஆச்சரியம்.
செலேகு தொலைக்காட்சியில் பிரபலமானது அவருக்கு நான்கு மனைவிகள் இருக்கும் காரணத்தால் தான். அவரின் குடும்பம் குறித்த அந்த நிகழ்ச்சியால் தான் நட்சத்திரமானார் செலேகு.
தனது யூடியூப் வீடியோவில் தான் சமத்துவத்தை எதிர்ப்பவன் இல்லை என்று தெரிவிக்கும் அவர் பெண்கள் பலதாரம் புரிந்தால் அவர்களின் குழந்தைகளின் நிலை குறித்து பெரிதும் கவலைப்படுவதாக தெரிவித்தார்.
எதிர்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும் பெண் நல ஆர்வலர்கள், சமூக பணியாளர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அரசின் இந்த முடிவை பெண் ஆர்வலர்கள் பலர் ஒரு மைல் கல்லாகதான் பார்க்கின்றனர்.
மே மாதம் திருமணச் சட்டங்களில் மாற்றத்தை கொண்டு வர இருப்பதாக அரசு தெரிவித்தபோது இதுகுறித்து சமூக ஊடகங்களிலும் அங்கு பலதரப்பட்ட கருத்துக்கள் எழுந்தன.
இதற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் இது ஆணாதிக்கத்திற்கு எதிரான ஒரு முடிவு என்கின்றனர். பெண்கள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு எனவே பல கணவர்களை கொண்டிருப்பது ஒரு தேர்வாக இருக்க வேண்டும் என்று உறுதியாக தெரிவித்தனர். இதை எதிர்ப்பவர்கள் பலரும் கலாசாரத்தின் பக்கம் கைகாட்டினர்.
திருமண சட்டத்தில், குழந்தைகள் திருமணங்களை தடுக்கும் வகையில் திருமணத்திற்கான குறிப்பிட்ட வயது, பல்வேறு பாலினத்தவர்கள், மதங்களை சார்ந்தவர்கள், கலாசார நம்பிக்கை கொண்டவர்களின் திருமணங்களை சட்ட ரீதியாக்குவது போன்ற மாற்றங்களும் முன்மொழியப்பட்டுள்ளன.
ஏனென்றால் தென்னாபிரிக்காவில் இந்து, யூத, முஸ்லிம், ரஸ்டாஃபாரியன் திருமணங்கள் சட்டப்பூர்வமானதாக கருதப்படுவதில்லை. அதேபோன்று அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சட்டமாகவும் அது இல்லை எனவேதான் இந்த மாற்றங்களை அதிபர் சிரில் ராம்ஃபோசாவின் அமைச்சரவை முன்மொழிந்துள்ளது. ஜூன் மாத இறுதி வரை தென்னாபிரிக்க மக்கள் இதுகுறித்த தங்களின் கருத்துக்களை பதிவு செய்யலாம்.
ஆர்வலர்கள், பாரம்பரிய குழுக்கள், மத தலைவர்கள், கல்வியாளர்கள், LGBTQ ஆர்வலர்கள் மற்றும் இருபால் ஆர்வலர்கள் ஆகியோரின் கருத்துகள் கேட்கப்பட்டுதான் இந்த பச்சை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்காவில் தற்போது உள்ள திருமணச் சட்டம் என்பது 1961ஆம் ஆண்டு கருப்பின மக்களுக்கு எதிரான பாகுபாடு மேலோங்கி இருந்த காலத்தில் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி கிறித்தவ முறை திருமணங்கள் மட்டுமே சட்டபடியாக செல்லும்.
1994ஆம் ஆண்டுக்கு பிறகு திருமணச் சட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் அது அனைவருக்குமானதாக இல்லை என்றும் போதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்றும் இந்த சட்ட முன்மொழிவின் போது உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.