கீழே கூறப்பட்டுள்ள 5 முக்கியமான விஷயங்களை பின்பற்றினால் பணி இடங்களில் பெண்களால் சிறப்பாக செயலாற்றிட முடியும். முயற்சி செய்யுங்கள், வெல்லுங்கள்.
அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பணிபுரிகின்றனர். ஆனால் சம்பள உயர்வு, பதவி உயர்வு, பணி செய்தல் போன்றவற்றில் மிகப்பெரிய அளவில் தேக்கங்கள் பெண்களுக்கு இருக்கின்றன. இவற்றில் இருந்து மீண்டு பணியிடத்தில் வெற்றிகரமான பெண்ணாக வருவதற்கு முதலில் கவனிக்க வேண்டிய ஐந்து விசயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
பயத்தில் கவனம் செலுத்திட கூடாது
என்னதான் பெண்கள் தங்களை தைரியமானவர்களாக காட்டிக்கொண்டாலும் அவர்களுக்குள் நிச்சயமாக பய உணர்வு என்பது இருக்கவே செய்யும். பொதுவாக பணியிடங்களில், பயந்த எதிர்ப்பு தெரிவிக்காத பெண்களிடத்தில் தான் ஆதிக்கத்தை அனைவரும் காட்டிட முயல்கிறார்கள். தைரியமான பெண்களிடத்தில் அவர்கள் அடக்கியே வாசிப்பார்கள். இதற்க்காகத்தான் பல பெண்கள் அவ்வாறு நடந்துகொள்கிறார்கள் .
பெண்களில் பலர் தங்களுக்கிருக்கின்ற பயத்தினை போக்கவோ அல்லது மறைக்கவோ அதிக நேரங்களையும் சக்திகளையும் வீணாக்குவதாக கூறுகிறார்கள். வேலைபார்க்கும் பெண்கள் செய்யவேண்டியது இதுதான், பயம் ஆண் பெண் இருவருக்குமே இருக்ககூடியது. அதனை போக்கியே ஆகவேண்டிய கட்டாயம் எதுவுமில்லை. தங்களுடைய பணியில் பயம் தொந்தரவு செய்திடாமல் பார்த்துக்கொள்வதே சிறந்தது. இதனை புரிந்துகொண்டால் வெற்றிதான்.
விமர்சனங்களை கடந்திடுதல் அவசியம்
ஒரு பெண் ஆணிடம் சிரித்துப்பேசினாலே தவறாக அர்த்தம் கொள்ளும் உலகமிது என்பதனை முதலில் உணரவேண்டியது பெண்கள். அதிக ஆண்கள் வேலைபார்க்கும் பணியிடங்களில் யாருடனும் பேசாமலும் சிரிக்காமலும் இருக்கவே முடியாது .
ஒரு பெண் தங்களைவிட உயருகிறார் என தெரிந்தால் மற்றவர்களின் முதல் தாக்குதல் பெண்ணிண் நடத்தை குறித்துதான். வேலைபார்க்கும் இடங்களில் இவையெல்லாம் நடக்கக்கூடியவையே என்பதனை உணர்ந்துகொண்டு இதுபோன்ற குப்பைகளை கடந்து போக கற்றுக்கொள்ள வேண்டும் .
துறை சார்ந்த பயிற்சியில் ஈடுபடுங்கள்
படிக்கும்போது முழுத்திறனையும் கொடுத்து படிக்கின்ற பெண்கள் வேலையில் சேர்ந்துவிட்டபிறகு பல காரணங்களால் முழுத்திறனையும் வெளிப்படுத்துவது இல்லை. பெண்களை ஒப்பிடும்போது ஆண்கள் தங்களுடைய வேலை சார்ந்த அறிவினை வளர்த்துக்கொள்ள புதிதாக படிக்கிறார்கள், பயிற்சிக்கு செல்கிறார்கள் .
பெண்களும் துறைசார்ந்த அறிவினை மேம்படுத்திக்கொள்ள முயலுவது அவசியம்.
முடியாது என சொல்வதை விட்டுவிடுங்கள்
வேலை பார்க்கும் இடங்களில் ஆண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை போன்று பெண்களுக்கு கொடுக்கப்படுவதில்லை, உண்மைதான். அதற்கான காரணம் பெண்களால் இரவுப்பணி போன்றவற்றையும் கடினமான வேலைகளையும் செய்ய முடியாது அல்லது கடினம் என நம்புவதால் தான். இந்த எண்ணங்களை உடைத்தெறிய தங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்படும்போது அதனை முடியாதென சொல்வதை விட்டுவிடுங்கள். அவ்வாறு சொல்லிடும்போது உங்களின் திறமையையும் ஆர்வத்தையும் நிறுவனத்தார் உணர்ந்து அங்கீகரிப்பார்கள் .
உங்களை பற்றிய எண்ணங்களை சிறப்பானதாக ஆக்கிக்கொள்ளுங்கள்
பிறர் என்னை பற்றி என்ன நினைத்தால் என்ன என கேட்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் அவ்வாறு நினைத்துக்கொள்ளலாம். ஆனால் பணியிடங்களில் நாம் ஒரு குழுவாகவே செயலாற்றுகிறோம். பிறரிடமிருந்து தான் நமக்கான பணியும் பதவி உயர்வும் கிடைக்கவேண்டி இருக்கின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறரின் மனதில் நம்மை பற்றிய எண்ணங்களை உயர்வானதாக வைத்துக்கொள்ளுவது மிகவும் அவசியம். அதற்கான முயற்சிகளில் பணி இடங்களில் நாம் செயலாற்றிட வேண்டும் .
மேற்கூறிய 5 முக்கியமான விசயங்களை பின்பற்றினால் பணி இடங்களில் பெண்களால் சிறப்பாக செயலாற்றிட முடியும். முயற்சி செய்யுங்கள், வெல்லுங்கள்.