பெண்கள் என்றாலே இதைத் தான் கேட்பீர்களா? கொந்தளித்த சானியா மிர்சா
பெண்களிடம் குழந்தை பெற்றுக் கொள்வது, திருமணம் செய்து கொள்வது இதையெல்லாம் பற்றி தான் கேட்பீர்களா? என்று செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு கொந்தளித்துள்ளார் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா.
மகளிர் இரட்டையர் வரிசையில் அசத்தி வரும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, Ace against Odds என்ற பெயரில் சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
அறிமுக விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் இந்த சுயசரிதை புத்தகத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.
இதில் தனது வாழ்வில் 5 வயதிலிருந்து நடந்த நிகழ்வுகள், டென்னிஸ் வாழ்க்கையில் தான்பட்ட கஷ்டங்கள் என அனைத்தையும் எழுதியுள்ளார்.
தற்போது இந்த புத்தகத்தின் புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளார் சானியா.
இந்த நிலையில் ஊடகம் ஒன்றிற்கு சானியா மிர்சா பேட்டியளித்த போது, செய்தியாளர், அந்த புத்தகத்தில் குழந்தைகள் பெற்றுக் கொள்வது பற்றியும் குடும்பமாக செட்டில் ஆவது குறித்தும் எதுவும் தெரிவிக்கவில்லையே? என கேள்வி எழுப்பினார்.
இதனால் கொந்தளித்த சானியா ‘ஒரு பெண் தன் வாழ்நாளில் எவ்வளவு சாதனைகள் செய்தாலும், அவர் திருமணம், குழந்தைப் பேறு போன்றவற்றால் தான் முழுமை அடைவதாக அர்த்தமா?
பெண்களைப் பார்த்தாலே ஏன் இது போன்ற கேள்விகளையே எழுப்புகிறீர்கள். ஆண் சாதனையாளர்களிடம் இது போல் கேட்பீர்களா? என்று சரமாரியாக கேள்விகளை கேட்டு சீறினார் சானியா.
பின்னர் தனது தவறை உணர்ந்த அந்த செய்தியாளர், தனது செயலுக்கு மன்னிப்பும் கேட்டார். மேலும், தனது கண்ணோட்டத்தை மாற்றி கொள்வதாகவும் தெரிவித்தார்
அவரின் இந்த பதிலால் சமாதானம் ஆன சானியா, தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட அவரது செய்கையைப் பாராட்டியுள்ளார்.