21 – 25 வயது (திருமணத்துக்கு முன்)
1) காத்திருக்கச் சொல்லும் காதலனின் முகம் பார்ப்பதா இல்லை, கை காட்டுபவனுக்கு கழுத்தை நீட்டச் சொல்லும் தந்தையின் சொல் கேட்பதா என்ற மனப் போராட்டத்தில் இருப்பீர்கள்.
2) வேலை தேடி அலையும் போதும், பெண்களெல்லாம் கல்யாண பத்திரிகையில் போட்டுக்கொள்ளத்தானே பட்டம் வாங்கினீர்கள் என்று நகைக்கும் ஆண்களையும் ஒற்றைப் புன்னகை சிந்தி கடந்து செல்வீர்கள்.
3) மல்லிகை பூவையும், கண்ணாடி வளையலையும், சுடிதாரையுமே அதிகம் விரும்பினாலும், வேலைக்கென ஒரு வேடம் போட்டுக்கொள்வீர்கள்.
4) பேசாவிட்டால், ‘உம்மனாமூஞ்சி’ என்று பெயர் எடுப்பீர்கள். கொஞ்சம் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசிவிட்டாலும், படித்த திமிர் என்ற பட்டம் வாங்குவீர்கள்.
5) சமையலறை பக்கம் கூட சென்று இருக்கமாட்டீர்கள். இப்போது மெல்ல மெல்ல எல்லாம் கற்றுக்கொள்ள ஆரம்பித்திருப்பீர்கள்.
6) முகப்பருக்களை கிள்ளுவதையே பகுதி நேர வேலையாக வைத்திருப்பீர்கள்.
7) ஊரைப் பிரிந்து ஏதோ ஒரு பெண்கள் விடுதியில், ஆயிரம் பெண்கள் சூழ்ந்திருக்கையிலும், தனிமையில் இருப்பதாய் உணர்வீர்கள்.
8) அடிக்கடி ‘ச்சே ஊரா இது எங்க ஊரெல்லாம் எப்படி இருக்கும் தெரியுமா’ என்ற வசனத்தை யாரிடமாவது சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்.
9) சொந்தங்கள் சேர்ந்த சுப நிகழ்ச்சிகளில் மாமாக்கள் எல்லாம் கல்யாணம் எப்பன்னு கேட்டா, அத்தைமார்கள் எல்லாம் எத்தனை பௌன் சேர்த்து வச்சுருக்கீங்கன்னு கேட்பார்கள்.
10) அம்மாவையும் அப்பாவையும் உங்கள் இரு சக்கர வண்டியில் ஏற்றிச் செல்ல ஆரம்பித்திருப்பீர்கள்.
11) புதிதாய் செல்லும் இடங்களில் மனதில் இருக்கும் பயம் கண்களில் தெரியக்கூடாது என்பதில் மிகவும் கவனமாய் இருப்பீர்கள். ஒரு ஆணை போல் நடந்துகொள்ள முடிந்தளவு முயற்சி செய்வீர்கள்.
12) வெளியில் சென்று வீடு திரும்பியதும், பேருந்தில் இடிபட்டதையும், மொபைல் நம்பர் கேட்டு பின்னால் வந்த ஆணை பற்றியும் வீட்டில் மூச்சு விடமாட்டீர்கள். தேவையற்ற பயத்தை அவர்களுக்கு தரவேண்டாம் என எண்ணுவீர்கள்.
13) உங்களுக்கென ஒரு கனவு உண்டா என்பதை சுற்றி இருக்கும் யாரேனும் கேட்க மாட்டார்களா என ஏங்குவீர்கள்.
14) எதையும் எதிர்கொள்ளும் துணிச்சலும் நம்பிக்கையும் நிறைந்து இருக்கும்.
15) எத்தனை சோகம் கண்ட போதிலும், பெண்ணாய் பிறந்ததற்காக பெருமை கொள்வீர்கள்.
16) அப்பா அதட்டி ஒரு சொல் சொல்லிவிட்டால் கலங்கிடும் கண்கள், அலுவலகத்தில் யார் முன்போ திட்டு வாங்கிவிட்டால் கூட கொஞ்சமும் கலங்காது. அழுதால் அதற்கும் இந்த உலகம் ‘நீலிக்கண்ணீர்’ என்றொரு பெயர் வைக்கும் என்பதை புரிந்திருப்பீர்கள்.