‘பிக்பாஸ்’ மூலம் கிடைத்த புகழை, 90 எம்.எல்., படம் மூலம் இழந்து விட்டதாக கருதப்படும் ஓவியா, அந்த படம் குறித்து நம்மிடையே பேசியதாவது:
90 எம்.எல்., எந்த மாதிரியான படம்?
சமூகத்தில், பெண்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என, கட்டுப்பாடு விதித்துள்ளனர். இதனால் பெண்கள் பயந்து வாழ வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்த படம், அதை உடைத்து எறியும். பெண்கள் யாருக்கும் பயப்படத் தேவையில்லை என்பதை சொல்வதே படத்தின் கதை.
பெண்கள் சுதந்திரம் என்பது, மது குடிப்பது, புகைபிடிப்பது தானா?
இந்தப் படத்தில் பெண்களுக்கான கருத்து எதையும் நாங்கள் சொல்லவில்லை. எதற்கு கருத்து சொல்ல வேண்டும்? எல்லா படத்திலும் ஆபாசம் இருக்கிறது. அதற்கும், ‘யு’ சான்று தருகின்றனர். பெண்களுக்குள் பேசும் விஷயத்தை மட்டும் தான், படத்தில் கூறியுள்ளோம்.
படத்தில் ஆபாசம் நிறைய இருக்கிறதே?
எதை ஆபாசம் என்கிறீர்கள்? இரட்டை அர்த்தம் வசனம் எதையும், நான் பேசவில்லை. அந்த ரீட்டா பாத்திரம் தான் பேசியுள்ளது. சினிமாவை பொழுதுபோக்காக மட்டுமே பார்க்க வேண்டும். பெயர், விளம்பரத்திற்காக நான் எதுவும் செய்யவில்லை. நடிகை என்றால் அனைத்து விதமான பாத்திரத்திலும் நடிக்க வேண்டும். ரசிகர்கள் எதிர்பார்ப்பதை தர வேண்டும். பெண்கள் ஆடை விஷயத்தில் மற்றவர்கள் தலையிட முடியாது.
அரசியலுக்கு வருவீர்களா?
அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை. அரசியலுக்கு வரும்படி, நான்கு பேர் என்னை அழைத்தனர். எனக்கு விருப்பம் இல்லை. பிரசாரத்திற்கும் போக மாட்டேன். என் தொழில் நடிப்பு மட்டுமே.
படத்தில் ஏன் இவ்வளவு வரம்பு மீறல்?
பயந்து வாழ்வதில் அர்த்தம் இல்லை. சமூகத்தில் இந்த மாதிரி பெண்களும் உள்ளனர். நான் படத்தில் ஆபாச காட்சியில் நடிக்கவில்லை.
இதுபோன்ற படங்களில் நடிப்பதால், உங்களுக்கு சமூக அக்கறை இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளதே…
இந்தப் படம் வரவில்லை என்றால், இதுமாதிரியான படமே வராமல் போயிடுமா… அனைத்து படத்திலும் வன்முறை, ஆபாசம் இருக்கிறது. எனக்கு பயம் இல்லை. என் ரசிகர்கள், படத்தின் பாத்திரத்தை பார்த்து பின்பற்றுவதில்லை.
காதல் அனுபவம்?
அது எல்லாருக்கும் தெரியும். காதலில் எனக்கு உள்ள நம்பிக்கை, கல்யாணத்தில் இல்லை. பெண்ணை பார்த்ததும், ‘எப்போ கல்யாணம்’ என கேட்பதை விட, ‘வாழ்க்கையில் என்ன செய்கிறீர்கள்?’ என கேளுங்கள்.–