களைகட்டத் தொடங்கிவிட்டது ஐ.எஸ்.எல் சீஸன் – 4. மொத்தம் 10 அணிகள் விளையாடிவரும் இந்தத் தொடரின், இரண்டாவது வாரத்தில் செம விறுவிறுப்பு. பெங்களூரு அணி 4 – 1 என்ற கோல்கணக்கில் டெல்லியைச் சாய்க்க, நடப்பு சாம்பியன் கொல்கத்தாவை 4 – 1 என சாய்த்தது புனே. மற்ற போட்டிகளில், கோவா 1 – 2 என்ற கோல்கணக்கில் மும்பையிடம் தோற்க, கேரளா மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கிடையே போட்டி டிராவில் முடிந்தது.
பெங்களூரு எஃப்சி – டெல்லி டைனமோஸ் எஃப்சி
பெங்களூரு எஃப்சி மற்றும் டெல்லி டைனமோஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில், இந்த ஐ.எஸ்.எல் சீஸனின் காஸ்ட்லி வீரரான மிக்கு மற்றும் மிட்ஃபீல்டர் லென்னி ரோட்ரிக்யூஸ் ஆகியோரின் கோல்களுடன், எரிக் பார்டலுவின் இரண்டு சூப்பரான ஹெட்டர்களும் டெல்லியை வீழ்த்த, தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியைப் பெற்றது பெங்களூரு அணி.
பெங்களூருவின் டிபென்ஸ் லைனைத் தாண்டி பந்து செல்லவே இல்லை. டெல்லி வீரர்களின் சிறந்த முயற்சிகள் எல்லாம் கோல்களாக மாற பெங்களூரு டிபெண்டர்கள் அனுமதிக்கவில்லை. அதனால் கோல்கீப்பர் குர்பிரீத் சிங் சந்துவுக்கும் பெரிதாக எந்த ஒரு தலைவலியும் இல்லை. தொடக்கத்திலிருந்தே அட்டாக்கிங் மோடில் இருந்த பெங்களூரு அணிக்கு, முதல் பாதியிலேயே 2 – 0 என்ற முன்னிலை கிடைத்தது. இரண்டு முறையும் பந்தை வலைக்குள் திணித்தவர் ஆஸ்திரேலியா நாட்டவரான எரிக் பார்டலு. அந்த இரண்டு கோல்களும் சூப்பர் ஹெட்டர்கள். அந்த இரண்டு முறையும் கோல்களுக்கு அடித்தளமாக இருந்தவர் ஸ்பெயின் நாட்டவரான எடு கார்சியா. கோல் வேட்டைக்கு வந்த பெங்களூரு அணி அடித்த ஷாட்டுகள் மொத்தம் 20. அதில் 13 ஷாட்டுகள் இலக்கை நோக்கி துல்லியமாக அடிக்கப்பட்டவை.
டெல்லியைப் பொறுத்தவரை பந்தை அதிக நேரம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், ஒரு கோல்கூட அடிக்க முடியவில்லை. 84-வது நிமிடத்தில் டெல்லி வீரர் செய்த்யசென் சிங் க்ராஸ் செய்த பந்து, பெங்களூரு டிஃபெண்டர் ஜான்சன் கையில் பட்டுவிட, ஹேண்ட் பால் மூலம் டெல்லிக்கு ஆறுதலாக ஒரு பெனால்டி கோல் மட்டுமே கிடைத்தது. ஆட்ட நாயகன் விருதை பெங்களூருவின் எரிக் பார்டலுவும், எமர்ஜிங் பிளேயர் விருதை டெல்லியின் வினித் ராயும் பெற்றனர்.