தகவல் தொழில்நுட்பம், வானிலை, வரைபடம் தயாரிப்பு என செயற்கைக்கோள்களின் பயன்கள் அதிகம். இந்தச் செயற்கைக்கோள்களின் ஆயுள் சில வருடங்கள்தான்.
அதன்பிறகு, எப்போது பூமியில் விழும் என்று சொல்ல முடியாமல், விண்வெளிக் குப்பையாக அவை நம் தலைக்கு மேல் மிதந்துகொண்டிருக்கின்றன.
இப்படி ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான செயற்கைக்கோள்கள் மற்றும் அவற்றின் குப்பைகள் பூமியில் விழுந்துகொண்டுதான் இருக்கின்றன.
இப்போது கிட்டத்தட்ட எட்டரை டன் எடை கொண்ட விண்வெளி ஆய்வு மையம் பூமியில் விழப்போகிறது என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர் விஞ்ஞானிகள்.
விண்வெளி ஆய்வுக்காக சீனா 2011ம் ஆண்டு தியேன்குங் -1 என்ற விண்வெளி ஆய்வுக் கூடத்தைச் செலுத்தியது.
இந்த விண்வெளி ஆய்வுக் கூடம் தன்னுடைய கட்டுப்பாட்டைக் கடந்த 2016 ஜூன் மாதம் இழந்தது.
இது 2017ம் ஆண்டு இறுதியில் பூமியில் விழும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த ஆய்வுக் கூடத்தின் முழுக் கட்டுப்பாடும் இழந்துவிட்டதால் எப்போது, எங்கு விழும் என்பதைக் கணிக்க முடியவில்லை.
தற்போது இந்த ஆய்வுக் கூடம் இன்னும் இரண்டு, மூன்று மாதங்களில் பூமியின் ஈர்ப்பு விசைக்குள் நுழைய வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அநேகமாக மார்ச் மாதத்தில் விழலாம் என்றும், பூமியில் மனிதர்கள் வசிக்கும் பகுதியில் விழுவதற்கான வாய்ப்பு 10 ஆயிரத்தில் ஒன்று என்ற அளவில் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்படி விழுந்தால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து இந்த ஆய்வுக் கூடத்தை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்.
புவி ஈர்ப்பு விசைக்குள் நுழையும்போதுதான் அது எந்த இடத்தில் விழக்கூடும் என்பது தெரியவரும்.
இதில், நச்சு ரசாயனங்கள் அதிக அளவில் இருக்கிறது என்பதால் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.