இரண்டு நாள் பயணமாக 17 மற்றும் 18 தேதிகளில் பிரதமர் மோடி பூட்டான் பயணம் மேற்கொள்கிறார்.
இது குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூட்டானுடன் இந்தியா ஆழமான நட்பு கொண்டிருப்பதாலும் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்பு நாடாக பூட்டான் இருப்பதாலும் பிரதமர் மோடி பூட்டானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்சுக், பிரதமர் டாக்டர் லோட்டே ஷேரிங் உள்ளிட்ட தலைவர்களுடனும் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
டோக்லாமின் ஒரு பகுதி பூட்டானுக்கு சொந்தமாக இருப்பினும் அதற்கு சீனா உரிமை கோரிவருகிறது. 2017ம் ஆண்டில் டோக்லாம் தங்களுக்கே சொந்தம் என்று சீனா படைகளை எல்லையில் குவித்தது.
இதனால் இந்தியாவும் தனது படைகளை எல்லையில் குவித்தது. சுமார் இரண்டு மாதகாலம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பனிப்போர் நீடித்து பின்னர் பேச்சுவார்த்தைகளில் சுமுக முடிவு எட்டப்பட்டு படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
இந்த சம்பவத்திற்குப் பிறகு முதன்முறையாக மோடி பூட்டானுக்குச் செல்வது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வெளியுறவு அமைச்சராக பதவியேற்ற ஜெய்சங்கர் தமது முதல் வெளிநாட்டுப் பயணமாக பூட்டானுக்கு சென்று திரும்பியுள்ளார்.