கண்டி பொல்கொல்லவில் 2008ஆம் ஆண்டு பயணிகள் பேருந்தின் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 4 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
அதை அவர்கள் 5 வருடங்களில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
குண்டுத் தாக்குதுல் நடத்தி 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சதித்திட்டம் தீட்டியமை, நிதியுதவி வழங்கினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்த 4 பேருக்கே சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிமன்றில் முன்னிலையான இரு சந்தேகநபர்கள் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
பிரதிவாதிகள் இந்தச் சம்பவம் தொடர்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு அதிகமான காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். சட்டத்தரணிகளான லக்ஸ்மன் பெரேரா, ஹசித விபுலநாயக்க ஆகியோர் முன்வைத்த காரணங்களை ஆராய்ந்த நீதிபதி பிரதிவாதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையை 5 ஆண்டுகளுக்கு அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களான விஸ்வநாதன் ரமேஸ்குமார் எனப்படும் இப்பன், காளியம்மன் மனோகரன் எனப்படும் மனோ, வேலு யோகராஜ் எனப்படும் சுதா, ராமநாதன் நதுதீபன் எனப்படும் தீபன் ஆகியோருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் நால்வருக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. ஏனைய இருவரும் கைது செய்யப்படாததால், குறித்த இருவர் இன்றியே வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.