தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்கில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 26 சந்தேக நபர்களின் கையெழுத்துக்களை பரிசோதனை செய்து மன்றுக்கு அறிக்கையளிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே, இதற்கான உத்தரவை அரச கையெழுத்து பரிசோதகருக்கு நேற்று பிறப்பித்துள்ளார்.
இந்த சந்தேக நபர்கள், புலிகள் அமைப்பில் சேர்வதற்காக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்துள்ளதாகவும், அவை தமது அதிகாரிகளால் மீட்கப்பட்ட பின்னர் கடந்த 2020 மார்ச் 26 ஆம் திகதி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
அதற்படி, இந்த சந்தேக நபர்கள் நிரப்பியதாக நம்பப்படும் குறித்த விண்ணப்பத்தில் உள்ள கையெழுத்தினையும் சந்தேக நபர்களின் கையெழுத்தினையும் ஒப்பீடு செய்ய வேண்டியுள்ளதாகவும் அதற்கு அனுமதியளிக்குமாறும் கோரினர்.
அதன்படியே இந்த உத்தரவு நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள 26 இளைஞர்களும் யாழ். பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்கள், சட்ட மா அதிபர் ஆலோசனை கிடைக்கும் வரையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]