“இலங்கை இராணுவத்தினர் போர் விதிகளை மதித்தே நடந்தார்கள். புலம்பெயர் புலிகள் சார் அமைப்புக்களின் கட்டுக்கதைகளை நம்பி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது” என நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமை மீறல்கள், போர் குற்றங்களில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள 58 இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக, ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 47 உறுப்பு நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் கோரிக்கை விடுத்திருந்தார்.
பொய் குற்றச்சாட்டுகள்
இராணுவத்திற்கு கலங்கம்?
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் வலியுறுத்தல் இலங்கை இராணுவத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் செயலாகும்.
இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தும் நடவடிக்கையை ஐ.நா.உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
ஐ.நா. உறுப்புரிமை நாடுகளிடம் இலங்கை இராணுவ அதிகாரிகளை கைது செய்யுமாறு அல்லது பயணத்தடை விதிக்குமாறு கோரிக்கை முன்வைக்க மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆணையாளரின் இந்த அறிவிப்புக்கு எதிராக அரசு கடும் கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.