நாடு முழுவதும் காணப்படும் நிலைமைகளின் அடிப்படையில், சட்டம், ஒழுங்களை தொடர்ந்தும் பாதுகாப்பதற்காக அனைத்து பொலிஸ் பிரிவுகளிலும் குற்றங்களை தடுப்பதற்காக ரோந்து பணிகளை அதிகரிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன சகல பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
சமூக ஊடகங்கள் வாயிலாக நபர்களை வன்முறைகளில் ஈடுபடுவதற்காகவும் பல குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கும் தூண்டி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.
இதனால், தேவையற்ற வகையில் நபர்கள் ஒன்றுக் கூடுவதை தடுக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் தனது சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.
ஒன்றுக் கூடி மேற்கொள்ளும் வன்முறை செயல்கள், குற்றங்களை தடுக்க உச்சப்பட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறும் தேவையான சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தும் ஆலோசனையையும் நடைமுறைப்படுத்தி, குற்றங்கள் மற்றும் வன்முறைகளை தடுக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் இந்த உத்தரவு சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்கள், மாவட்டங்களுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் உட்பட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.