பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்கான தட்டுப்பாடு தொடரும் நிலையில் அது படிப்படியாகப் போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், உணவு விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி அவற்றை முழுமையாக ஸ்தம்பிதமடையச்செய்துள்ளது.
அதன் விளைவாக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் எவையுமின்றி நாடு தானாகவே முடங்கும் நிலையேற்பட்டுள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தனியார் பஸ்சேவை
எரிபொருள் நெருக்கடியின் காரணமாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் அறிவிப்பின்படி சனிக்கிழமை (18) மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தனியார் பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டன. அதன்படி சேவையில் ஈடுபடுத்தப்பட்ட தனியார் பஸ்களின் எண்ணிக்கை 15 – 20 சதவீதத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டது.
பேராதனை பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்
தற்போது அனைவரும் முகங்கொடுத்திருக்கும் பாரிய நெருக்கடியின் காரணமாக பரீட்சைகள் உள்ளடங்கலாக அனைத்துக் கல்விச்செயற்பாடுகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதுடன், பல்கலைக்கழக விடுதிகள் உடனடியாக மூடப்படுவதாக பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமாவன்ச அறிவித்துள்ளார்.
எனவே அனைத்து மாணவர்களையும் பல்கலைக்கழகத்தைவிட்டு உடனடியாக வெளியேறுமாறும், கல்விச்செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் திகதி விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுகாதாரசேவை வழங்கலில் தீவிர தாக்கம்
எரிபொருளுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு உலகநாடுகளின் மத்தியில் முன்னணியில் இருந்த இலங்கையின் சுகாதாரசேவையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. மருந்துப்பொருள் தட்டுப்பாட்டினால் ஏற்கனவே சுகாதாரசேவை முகங்கொடுத்திருந்த நெருக்கடி இப்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.
‘நாடு முகங்கொடுத்திருக்கும் எரிபொருள் நெருக்கடி எமது வைத்தியாசாலையின் சுகாதாரப்பணியாளர்களை நேரடியாகப் பாதித்துள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவல், சுகாதாரப்பணியாளர் வேலைநிறுத்தம் போன்ற சந்தர்ப்பங்களில் கூட நோயாளர்களுக்கான உச்சபட்ச சேவை வழங்கலை உறுதிசெய்தபோதிலும், இப்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டினால் இந்தச் சேவை வழங்கல் பாதிக்கப்படும் நிலையுருவாகியுள்ளது’ என்று மஹரகம அபேக்ஷா வைத்தியாசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை பொதுமக்கள் கோபமடையக்கூடும் என்று அத்தியாவசியசேவையாகப் பெயரிடப்பட்டுள்ள சுகாதாரசேவையை சார்ந்த வைத்தியர்களுக்கு பெற்றோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளை வழங்குவதற்கு எரிபொருள் நிரப்புநிலைய ஊழியர்கள் மறுப்புத்தெரிவிப்பதால் அத்தியாவசியசேவைக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் எரிபொருள் நிரப்புநிலையங்களில்கூட தாம் 6 – 10 மணித்தியாலங்களைச் செலவிடவேண்டியிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் தேசிய வைத்தியசாலையின் இருதய சத்திரசிகிச்சை நிபுணர்கள், எனவே நாளைய தினத்திலிருந்து இரு சத்திர சிகிச்சைப்பிரிவுகள் மாத்திரமே இயங்கும் என்றும் வாரமொன்றில் சத்திரசிகிச்சை நிபுணரொருவர் இரண்டு சத்திரசிகிச்சைகளை மாத்திரமே மேற்கொள்வார் என்றும் அறிவித்துள்ளனர்.
அதுமாத்திரமன்றி அநேகமான வைத்தியர்கள் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக பஸ் வண்டிகளிலேயே பயணிப்பதாகவும், எனவே தாம் வைத்தியசாலைக்கு வருகை தருவதற்குத் தாமதமேற்படும் பட்சத்தில் நோயாளர்கள் காத்திருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதிக கட்டணம் வசூலிக்கும் முச்சக்கரவண்டிகள்
எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து பெருமளவான முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் பயணிகளை ஏற்றிச்செல்வதற்கு மறுப்பதுடன், அவ்வாறு ஏற்றிச்செல்லவேண்டுமேயானால் தாம் கோரும் கட்டணத்தைச் செலுத்தவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். இதன் காரணமாக பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் சாதாரண பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெறிச்சோடிய வீதிகள்
வழமையாகக் கொழும்பில் சனிக்கிழமைகளில் வீதிகளில் செல்லும் வாகனங்களில் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் நேற்றைய தினம் மிகவும் குறைவான வாகனங்களே பயணித்ததுடன், போக்குவரத்து நெரிசல் இல்லாததன் காரணமாக வீதிகள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன.