உன் கவிதைகளில் ஏன்
அடிக்கடி புறாக்கள் பறக்கின்றன
என்று கேட்கிறான் நண்பன்
கவிதைகளில் மட்டுமல்ல நண்பா
என் கனவுகளிலும்
புறாக்களே வருகின்றன
நேற்றைய கனவில்
நீதிமான்கள்
நியாயவான்கள் வாழ்கிற
நீண்ட நெடிய கட்டிடத்திலிருந்து
பல்லாயிரம் புறாக்கள்
ஒவ்வொன்றாக
விழுந்து
விழுந்து
தம்மை மாய்த்துக்கொண்டன
உடைந்த இறகுகள்
மாசடைந்த காற்றில்
திசையெங்கும் சிதற
தெருமூழ்க ஓடியது
புறாக்களின் இரத்தம்
உயர்சாதிவாகனங்கள்
வழுக்காமல் விரைய
குற்றவாளிகளாக்கப்பட்ட
கைதிகளைக் கூட்டிவந்து
வீதிகளைக் கழுவிக்கொண்டிருந்தது
அதிகாரம்
அந்தப் பின்னந்தியில்
புறாக்களுக்குத்
தானியம் ஊட்டுபவர்கள்
புறாக்களோடு
படமெடுத்துக்கொண்டவர்கள்
புறாக்களை
அன்பாகவும் அமைதியாகவும்
கவனித்துக்கொண்டிருந்தவர்கள்
எல்லோரும்
கையறுநிலையில்
கலக்கமுற்றிருந்தார்கள்
இருள்மூடிய கிளையில்
இடமிழந்த புறாவொன்றின்
தீவழியும் கண்களை
இரத்தம் வழியும் விரலால்
துடைத்துக்கொண்டிருந்தது
இன்னொரு புறா