புரோ கபடி லீக் 5-வது சீசனுக்கான பரிசுத் தொகை ரூ.2 கோடியில் இருந்து 8 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டிகள் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. 11 மாநிலங்களில் இருந்து 12 அணிகள் கலந்துகொள்ளும் இந்த தொடரில் 130 ஆட்டங்கள் சுமார் 13 வார காலம் நடைபெற உள்ளது. இந்த சீசனில் பாட்னா, மும்பை, ஜெய்ப்பூர், தெலுகு டைட்டன், பெங்களூரு, பெங்கால் வாரியர், புனே, டெல்லி ஆகிய அணிகளுடன் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, குஜராத், ஹரியாணா ஆகிய 4 புதிய அணிகளும் கலந்து கொள்கின்றன.
சச்சின் டெண்டுல்கர் இணை உரிமையாளராக உள்ள தமிழ்நாடு அணிக்கு தமிழ் தலைவாஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கான பரிசுத் தொகை ரூ.8 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக போட்டி அமைப்பாளர்கள் நேற்று அறிவித்துள்ளனர்.
கடந்த சீசனில் இந்த தொடரின் பரிசுத் தொகை ரூ.2 கோடியாக மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ.3 கோடி பரிசாக வழங்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1.80 கோடியும், 3-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.1.20 கோடியும், 4-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.80 லட்சமும், 5 மற்றும் 6-வது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.35 லட்சமும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புரோ கபடி லீக் 5-வது சீசனின் தொடக்க ஆட்டம் வரும் 28-ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில் தெலுங்கு டைட்டன்ஸ், தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன. இந்த தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.