பொரி விளங்காய் உருண்டை புரோட்டீன் நிறைந்தது. இது குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
புழுங்கலரிசி – 200 கிராம்
பச்சை பயறு – 100 கிராம்
கோதுமை – 100 கிராம்
வறுத்த வேர்க்கடலை (தோல நீக்கியது) – 1 கப்
பொட்டுக்கடலை – ஒரு டீஸ்பூன்
லவங்கம் – 7
சுக்குப்பொடி – கால் டீஸ்பூன்
தேங்காய் – சிறிதளவு (துருவி (அ) நறுக்கி நெய்யில் வதக்கியது)
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
பாகு வெல்லம் – 400 கிராம்
நெய் – சிறிதளவு
செய்முறை:
புழுங்கலரிசியை சிவக்க வறுத்து மாவாக்கவும்.
பச்சை பயறு, கோதுமையை சிவக்க வறுத்து மாவாக்கவும்.
இந்த மாவுகளுடன் சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், வேர்க்கடலை, பொட்டுக் கடலை, வதக்கிய தேங்காய், லவங்கம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும்.
வெல்லத்தில் சிறிதளவு நீர் விட்டு கரைத்து அடுப்பில் ஏற்றி, கொதிவந்தவுடன் வடிகட்டி, மீண்டும் அடுப்பில் ஏற்றி, உருண்டை பாகுக்கு விடுவதைக் காட்டிலும் ஒரு கொதி அதிகமாக வர விட்டு, நெய் சேர்க்கவும்.
பிறகு, மாவுக் கலவையில் கொட்டி, நன்கு பிரட்டவும்.
கையில் அரிசி மாவு தொட்டு, மாவுக் கலவையை உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
இந்த பொரி விளங்காய் உருண்டை ஒரு மாதம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
மருத்துவப் பலன்கள்: குழந்தைகளுக்கு, தேவையான புரோட்டீன் நிறைந்தது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும். மேலும் புரதச்சத்துக் குறைபாட்டால்தான் முடி செம்பட்டையாகும். அந்தப் பிரச்சனைக்கு, இந்த உருண்டை நல்ல மருந்து.
_____________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news