தமிழ் மற்றும் சிங்கள சமூகத்தின் புரிந்துணர்விற்காக தகவல்களை கொண்டு செல்ல கூடிய தபால் காரனாக தான் இருப்பதாக தேசிய கல்ந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மதம் மற்றும் மொழி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு பாடசாலைகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்ய விட்டால் ஒரு நாளும் இலங்கையை திருத்த முடியாது
காலாவதியான அரசியல்வாதிகள் ஒதுங்கிக்கொண்டு இவ்வாறான புதிய சிந்தனைகளுக்காக இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு மொழி உரிமை இல்லை என்றால் எந்தளவு பிரச்சினைகள் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும்.
தேசிய கீதம் விவகாரத்தில் கூட 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது இரண்டு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
ஆனால் அதன்பின்னர் தமிழில் இசைக்கப்படவில்லை. மீண்டும் தமிழில் தேசிய கீதத்தை இசைப்பதற்கு எமக்கு 70 ஆண்டுகள் சென்றுள்ளன.
இதுவே மாற்றம். தாய்மொழியில் தேசிய கீதத்தை இசைக்கும்போது உணர்வு பூர்வமாக அனுபவித்து இசைக்க முடிகின்றது. புரியாத மொழியில் பாடுவதால் எவ்விதமான பலனும் இல்லை என சுட்டிக்காட்டினார்.
வடக்கிலும் தெற்கிலும் அடிப்படை வாதிகள் உள்ளனர். அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றனர் அவற்றுக்கு வாய்ப்பளிக்க முடியாது.
நான் இந்நாட்டில் ஜனாதிபதியாக போவதில்லை. பிரதமாராகுவதும் இல்லை. அமைச்சராக தொடர்ந்து இருக்கப்போவதும் இல்லை. காலாவதியான அரசியல்வாதிகள் ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.
வடக்கு மற்றும் தெற்கில் இந்த பிரச்சினை உள்ளது. இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். அப்போது தான் புதிய சிந்தனைகள் பிறக்கும். பழமையான மரபுகள் மற்றும் சம்பிரதாயங்களில் இருந்து வெளியில் வரவேண்டும்.
தமிழ் மக்களுக்குள்ள பிரச்சினைகள் என்ன என்பது எனக்கு நன்கு தெரியும். அதேபோன்று இந்த விடயத்தில் சிங்கள மக்களுக்குள்ள சந்தேகங்களும் எனக்கு தெரியும்.
எனவே இந்த இரண்டு சமூகங்களுக்கும் தகவல்களை கொண்டு செல்லக்கூடிய தபால் காரனாக இருப்பதோடு இரு தரப்பையும் இணைக்கும் பாலமாகவும் உள்ளேன் என அவர் தெரிவித்தார்.