உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரப்புரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் எழுச்சிப் பாடல்கள் பயன்படுத்தப்பட்ட விவகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
“வடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளுக்கு, விடுதலைப் புலிகளின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ்த் தேசியப் பாடல்கள் பயன்படுத்தப்படுவது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளோம்- என்று கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
அவர் தெரிவித்தாவது-,
இந்தப் பாடல்களை தேர்தல் பரப்புரைகளுக்குப் பயன்படுத்துவது தேர்தல் விதிமீறலாகும். யாழ்ப்பாணத்தில் உள்ள தமது பணியகத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசியல்வாதியான அங்கஜன் இராமநாதன் புலிகளின் பாடல்களை ஒலிக்கவிட்டிருந்தார்.
அங்கு அரச தலைவர் மைத்திரியின் படம் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அதேவேளை, புலிகளின் பாடல்களும் ஒலிக்க விடப்பட்டிருந்தன. இது தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் இது சட்டமீறலாகும். இன, சாதி அடிப்படையிலான பரப்புரைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.