கால்லே டெஸ்ட் போட்டியில் ஒரு அபாரமான கேட்ச், ஒரு எதிர்பாராத ரன் அவுட் ஆகியவற்றுக்குக் காரணமாக இருந்த அபினவ் முகுந்த் 2-வது இன்னிங்சில் 81 ரன்களையும் எடுத்தார்.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டியில் தனது பீல்டிங் பற்றி கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இந்த டெஸ்ட் போட்டியில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அடுத்த டெஸ்ட் பற்றி நான் யோசிக்கவில்லை. முதல் தெரிவு அல்லது 2ம் தெரிவு தொடக்க வீரர் என்பதில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.
வாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்த விரும்புகிறேன்.
நிரோஷன் டிக்வெல்லா கேட்ச், உபுல் தரங்கா ரன் அவுட் என்னிடத்தில் தன்னம்பிக்கையை அதிகரித்தது. விளையாடாத காலத்தில் நெருக்கமான களவியூகத்தில் என பீல்டிங்கை இன்னும் மெருகேற்றினேன். முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது குறித்து ஏமாற்றமடைந்தேன்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான புனே டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு எளிதான கேட்ச் வாய்ப்பைத் தவற விட்டதில் ஏமாற்றமடைந்தேன். அதன் பிறகே பயிற்சி மேற்கொண்டேன், நான் ஏதோவொரு விதத்தில் சிறப்பாகத் திகழ வேண்டும் என்று விரும்பினேன்.
இந்திய அணியில் ஏதாவதொரு பீல்டிங் நிலையில் நாம் சிறப்பாகத் திகழ்வது அவசியம். பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதருடன் நிறைய இணைந்து பணியாற்றினேன்.70-80 ஓவர்கள் கிரீசுக்கு நெருக்கமான இடத்தில் ஹெல்மெட்டுடன் பீல்ட் செய்வது அவசியம். உடற்தகுதி பயிற்சியாளருக்கு நன்றி.
என் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் வெள்ளைச் சீருடையையே துறக்க எண்ணினேன். நான் எந்த அணியிலும் இல்லை, என் முதல் தர அணியிலிருந்தே நீக்கப்பட்டேன். எனவே இந்த இந்திய அணியில் இருப்பது பெரிய போனஸ்.
இவ்வாறு கூறினார் அபினவ் முகுந்த்.