பி. சரவணமுத்து ஓவல் விளையாட்டரங்கில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய புனித ஆசீர்வாதப்பர் கல்லூரிக்கும் வெஸ்லி கல்லூரிக்கும் இடையிலான 4ஆவது வருடாந்த 2 நாள் கிரிக்கெட் போட்டியில் புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி 46 ஓட்டங்களால் வெற்றியீட்டி வண. ஜேம்ஸ் காட்மன் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்தது.
இப் போட்டி வெள்ளிக்கிழமையும் (23), சனிக்கிழமையும் (24) நடைபெற்றது.
விண்ணகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட போட்டி என வருணிக்கப்படும் பென்ஸ் – வெஸ்லி கிரிக்கெட் சமரில் அணி ஒன்று முழுமையான வெற்றியை ஈட்டியது இதுவே முதல் தடவையாகும்.
அந்த முழு வெற்றியை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரிக்கு ஈட்டிக்கொடுத்த முதலாவது அணித் தலைவர் என்ற பெருமையை 19 வயதுக்குட்ட இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் சண்முகநாதன் ஷாருஜன் பெற்றுக்கொண்டார்.
2021இல் ஆரம்பமான இந்த கிரிக்கெட் சமரில் முதல் 3 அத்தியாயங்களிலும் முடிவு கிட்டவில்லை.
பந்துவீச்சாளர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட இந்தப் போட்டியில் புனித ஆசீர்வாதப்பர் அணியின் இடதுகை சுழல்பந்துவீச்சாளர் மெவான் திசாநாயக்க 69 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்களைக் கைப்பற்றி புனித ஆசீர்வாதப்பர் அணியின் வெற்றியில் பெரும் பங்காற்றினார்.
முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் குவியலை அவர் பதிவுசெய்திருந்தார்.
மறுபக்கத்தில் வெஸ்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் உவின் பெரேரா 2ஆவது இன்னிங்ஸில் 5 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 17.5 ஓவர்கள் வீசி 34 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தி பென்ஸ் – வெஸ்லி கார்ட்மன் கிண்ண கிரிக்கெட்டில் அதி சிறந்த பந்துவீச்சப் பெறுதியைப் பதிவுசெய்து வரலாறு படைத்தார்.
எனினும் சக வீரர்களின் மோசமான துடுப்பாட்டத்தால் உவின் பெரேராவின் பந்துவீச்சு சாதனை பலனற்றுப் போனது.
அப் போட்டியில் முதலாவது இன்னிங்ஸில் புனித ஆசீர்வாதப்பர் அணி சகல விக்கெட்களையும் இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.
வெஸ்லி அணி முதலாம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை ஆட்டம் தொடரவிருந்தபோது வெஸ்லி அணித் தலைவர் சனிது அமரசிங்க முதலாவது இன்னிங்ஸை நிறுத்திக்கொள்ளவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து தனது 2ஆவது இன்னிங்ஸில் மிக மோசமாக துடுப்பெடுத்தாடிய புனித ஆசீர்வாதப்பர் அணி 110 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
139 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய வெஸ்லி 92 ஓட்டங்களுக்கு சுருண்டது.
போட்டியின் ஒரு கட்டத்தில் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து ஓரளவு சிறப்பான நிலையில் இருந்த வெஸ்லி அதன் பின்னர் 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 8 விக்கெட்களை இழந்து தோல்வியைத் தழுவியது.
லிதும் செனுஜ 70 பந்துகளையும் நிலுபுல் லியனகேவும் 31 பந்துகளையும் எதிர்கொண்டு வெஸ்லியை தோல்வியிலிருந்து மீட்க முற்பட்டனர். ஆனால் லியனகே தனது 32ஆவது பந்தில் ஆட்டம் இழந்ததும் வெஸ்லி நெருக்கடியை எதிர்கொண்டது. கடைநிலை வீரர் கீத் சத்சர போட்டி முடிவடைய 3.4 ஓவர்கள் மீதமிருந்தபோது ஆட்டம் இழக்க புனித ஆசீர்வாதப்பர் அணியின் வெற்றி உறுதியாயிற்று.
இந்தப் போட்டியில் இரண்டு அணிகளிலும் தனி நபருக்கான அதிகூடிய 42 ஓட்டங்ளை புனித ஆசீர்வாதப்பர் அணியின் உதவித் தலைவர் அர்ஷான் ஜோசப் பெற்றார்.
அத்துடன் முழு போட்டியிலும் புனித ஆசீர்வாதப்பர் அணிய சார்பாக ஜனிந்து நந்தசேனவும் சண்முகநாதன் ஷாருஜனும் முதலாவது இன்னிங்ஸில் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 57 ஓட்டங்களே அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.
பந்துவீச்சில் உவின் பெரேரா, மெவான் திசாநாயக்க ஆகியோரைவிட வெஸ்லி அணித் தலைவர் சனிது அமரசிங்க, அவரது சக வீரர் லினால் சுபசிங்க ஆகிய இருவரும் முதல் இன்னிங்ஸில் தலா 4 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தனர்.
விசேட விருதுகள்
சிறந்து துடுப்பாட்ட வீரர்: அர்ஷான் ஜோசப் (பென்ஸ்)
சிறந்த பந்துவீச்சாளர்: உவின் பெரேரா (வெஸ்லி)
சிறந்த களத்தடுப்பாளர்: விஹங்க ரத்நாயக்க (பென்ஸ்)
ஆட்டநாயகன்: மெவான் திசாநாயக்க (பென்ஸ்)
எண்ணிக்கை சுருக்கம்
புனித ஆசீர்வாதப்பர் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 150 (அர்ஷான் ஜோசப் 42, ஜனிந்து நந்தசேன 30, சண்முகநாதன் ஷாருஜன் 29, மெவான் திசாநாயக்க 13, லினால் சுபசிங்க 40 – 4 விக்., சனிது அமரசிங்க 45 – 4 விக்.)
வெஸ்லி 1ஆவது இன்: 122 – 8 விக். டிக்ளயாட் (அனுக பஹன்சர 28, ருக்ஷான் தரங்க 21 ஆ.இ., ப்றெண்டன் பெர்னாண்டோ 20, லினால் சுபசிங்க 20, மெவான் திசாநாயக்க 43 – 5 விக்., யொஹான் எதிரிசிங்க 38 – 2 விக்.)
புனித ஆசீர்வாதப்பர் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 110 (விஹங்க ரத்நாயக்க 20 ஆ.இ., நேதன் பெர்னாண்டோ 18, சமிது மதுரங்க 13, உவின் பெரேரா 34 – 6 விக்., சனிது அமரசிங்க 54 – 3 விக்., ஷக்கேஷ் மினோன் 1 – 1 விக்.)
வெஸ்லி (வெற்றி இலக்கு 139 ஓட்டங்கள்) 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 92 (லிதும் செனுஜ 18 ஆ.இ., ப்றெண்டன் பெர்னாண்டோ 18, மெவான் திசாநாயக்க 28 – 4 விக்., விஹங்க ரத்நாயக்க 11 – 2 விக், யொஹான் எதிரிசிங்க 20 – 2 விக், அயேஷ் கஜநாயக்க 28 – 2 விக்.)