கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் வார இறுதியில் நடைபெற்ற புனிதர்களின் 50ஆவது வருடாந்த கிரிக்கெட் போட்டியில் புனித சூசையப்பர் கல்லூரியை 3 விக்கெட்களால் புனித பேதுருவானர் கல்லூரி வெற்றிகொண்டு அருட்தந்தை பீட்டர் ஏ. பிள்ளை ஞாபகார்த்த கேடயத்தை சுவீகரித்தது.
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் வரலாற்றில் புனித சூசையப்பர் கல்லூரிக்கும் புனித பேதுருவானவர் கல்லூரிக்கும் இடையிலேயே முதன்முதலாக 1975ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
அந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த கிரிக்கெட் போட்டியில் புனித சூசையப்பர் அணித் தலைவராக விளையாடிய துஷான் சொய்ஸா, புனித பேதுருவானவர் அணித் தலைவராக விளையாடிய பேர்னாட் விஜேதுங்க ஆகிய இருவரும் புனிதர்களின் 50ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு பிரதம அதிதிகளாக அழைக்கப்பட்டிருந்தமை மிகவும் பொருத்தமானதாகும்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய புனித சூசையப்பர் அணி 48.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றது. ஹிருன் கப்புருபண்டார, உதவி அணித் தலைவர் ஹிரான் ஜயசுந்தர ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 124 ஓட்டங்களைப் பகிர்ந்ததால் புனித சூசையப்பர் அணி கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடைசி 8 விக்கெட்கள் 83 ஓட்டங்களுக்கு விழ்த்தப்பட்டதால் அவ்வணியினால் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற முடியாமல் போனது. துடுப்பாட்டத்தில் ஹிருன் கப்புருபண்டார 70 ஓட்டங்களையும் ஹிரான் ஜயசுந்தர 65 ஓட்டங்களையும் செனுஜ வக்குனுகொட ஆட்டம் இழக்காமல் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் லஷ்மிக்க பெரேரா 51 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷெனன் ரொட்றிகோ 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷேன் ஹலம்பகே 53 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
230 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய புனித பேதுருவானவர் அணி 45.4 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 230 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஒவீன் சல்காதோ, டிலன தம்சர ஆகிய இருவரும் 113 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். மத்திய வரிசையில் ஷெனன் ரொட்றிகோ, நேதன் டேவிட், இஷிர அயூபால ஆகியோர் சிறந்த பங்களிப்பை வழங்க புனித பேதுருவானவர் அணி வெற்றியீட்டியது.
துடுப்பாட்டத்தில் டிலன தம்சர 67 ஓட்டங்களையும் ஒவீன் சல்காதோ 40 ஓட்டங்களையும் ஷெனன் ரொட்றிகோ 36 ஓட்டங்களையும் நேதன் டேவிட் ஆட்டம் இழக்காமல் 35 ஓட்டங்களையும் இஷிர அயூபால 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் யெனுல தெவ்துச 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
டயலொக் ஆசிஆட்டா குழுமத்தின் அனுசரணையில் நடைபெற்ற 50ஆவது புனிதர்களின் ஒருநான் கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்பு வைவத்தில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட டயலொக் ஆசிஆட்டா குழுமத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி லசன்த தேவரப்பெருமவிடமிருந்து சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதை புனித பேதுருவானவர் அணி வீரர் திலன தம்சர பெற்றுக்கொண்டார்.ஆட்டநாயகன்: ஷெனன் ரொட்றிகோ (புனித பேதுருவானவர், 36 ஓட்டங்கள், 2 விக்கெட்கள்)
சிறந்த துடுப்பாட்ட வீரர்: டிலன தம்சர (புனித பேதுருவானவர்)
சிறந்த பந்துவீச்சாளர்: யெனுல தெவ்துச (புனித சூசையப்பர்)