புலி வரும் கதையாகிவிட்டது ரஜினியின் அரசியல் பயணம். போர் வரட்டும் பார்த்து கொள்ளலாம் என்று ரசிகர்களுடனான சந்திப்பில் உரக்க முழக்கமிட்டார் ரஜினி. ஆனால், அதன்பின்னர் ரஜினி அப்படியே அமைதியானார். செப்டம்பரில் கட்சி துவங்குவார், பிறந்தநாளில் கட்சி துவங்குவார் என ரஜினி ரசிகர்கள் காத்திருந்து ஏமாற்றம் அடைந்தது தான் மிச்சம்.
ரஜினிக்கு பதிலாக நடிகர் கமல், அரசியலில் அதிக தீவிரம் காட்டி பரபரப்பான அறிக்கை, டுவிட்டரில் முழக்கம் என கமலின் பாணியே மாறியது. ரஜினிக்கு முன்னர் அவர் அரசியல் பயணத்தை துவக்கி விடுவார் என பேச்சுக்கள் வர தொடங்கின.
இந்நிலையில் வருகிற டிச., 26ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மீண்டும் ரசிகர்களை மாவட்டம் வாரியாக சந்திக்க உள்ளார். கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் காலை 7 மணி முதல் மதியம் 3 மணி வரை இந்த சந்திப்பு நடக்கிறது. தினமும் ஆயிரம் ரசிகர்களை சந்திக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் துவங்கி உள்ளன.
முன்னதாக ரசிகர்களுடனான சந்திப்பிற்கு முன்னர் ரஜினி, காந்திய மக்கள் இயக்க தலைவரான தமிழருவி மணியன் உடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த சந்திப்பில் அரசியல் பிரவேசம் பற்றி பேசியிருப்பதாக கூறப்படுகிறது. அநேகமாக டிச.,31-ம் தேதி ரசிகர்கள் உடனான சந்திப்பு இறுதிநாளில், ரஜினி தன் அரசியல் பிரவேசம் பற்றி அறிவிக்கலாம் என கூறப்படுகிறது.
ரசிகர்களுடனான ஆலோசனை மற்றும் அவர்களின் கருத்தை கேட்ட பின்னர் அரசியல் முடிவை ரஜினி அறிவிப்பார் என தமிழருவி மணியன் கூறியுள்ளார். இதன்மூலம், 2018-ம் ஆண்டு துவக்கம் ரஜினியின் அரசியல் பிரவேச ஆண்டாக இருக்கும் என்கிறார்கள்.