நிலத்தில் கிடங்கு வெட்டிப் புதைத்த நிலையில் 30 கிலோகிராம் கேரளக் கஞ்சா போதைப் பொருள் மீட்கப் பட்டது. அதை விற்க முற்பட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட மற்றைய இருவர் தப்பியோடியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் மடு சின்னப்பண்டிவிரிச்சான் காட்டில் நேற்றுமுன்தினம் மாலை இடம்பெற்றது. கிடைத்த தகவலின் அடிப்படையில் கஞ்சா கொள்வனவு செய்தவற்காக மாறுவேடத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற சிறப்பு அதிரடிப்படையினரே இந்த அதிரடியில் ஈடுபட்டனர்.
கஞ்சா பொலித்தீனில் பொதியிடப்பட்ட நிலையில் காட்டுக்குள் புதைத்து வைத்திருந்தமையைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.அவற்றை வாங்க முற்பட்டபோது கிடங்கில் புதைக்கப்பட்ட நிலையிலிருந்து சந்தேகநபர் மீட்டு எடுத்துக் கொடுத்தார். அதற்குரிய பணத்தை வாங்கவென கஞ்சாவுடன் நேரடித் தொடர்புடைய ஒருவர் அங்கு சென்று சற்றுத் தள்ளி நின்றுள்ளார். கஞ்சா எடுத்துக்கொடுத்தவரைப் அதிரடிப்படையினர் கைது செய்ததும் மற்றைய இருவரும் தமது மோட்டார் சைக்கிளில் தப்பியோடியுள்ளனர்.
கஞ்சாவுடன் அவர் மடு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். மன்னார் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார். அவர் மன்னாரைச் சேர்ந்த பெனடிக்ற் றொபின்சன் என்று அழைக்கப்படுகிறவர் என்றும் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.