சமூகத்தில் புரையோடிக் இருக்கும் பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி தயாராகி வரும் புதிய படத்திற்கு “மெய்ப்பட செய்” என பெயரிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குனர் வேலன் இயக்கத்தில் தயாராகி வரும் முதல் திரைப்படம் “மெய்ப்பட செய்” இந்த படத்தில் புதுமுக நடிகர் ஆதவ் பாலாஜி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அறிமுக நடிகை மதுனிகா நடிக்கிறார்.
இவர்களுடன் மூத்த நடிகர் ராஜ் கபூர், “ஆடுகளம்” ஜெயபாலன், ஓ ஏ கே சுந்தர், பெஞ்சமின், சூப்பர் குட் சுப்பிரமணி, விஜய கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஆர். வேல் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு இசை அமைப்பாளர் பரணி இசையமைக்கிறார். எஸ் ஆர் பிலிம் ஃபேக்டரி என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் தமிழ் ராஜ் இப்படத்தை தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில் “சட்டம் போட்டாலும், கடுமையான தண்டனை இருந்தாலும், தொடர் விழிப்புணர்வு வழங்கி வந்தாலும் சமூகத்தில் பாலியல் வன்கொடுமை குற்றம் குறைவதில்லை. எனவே பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி வித்தியாசமான கோணத்தில் உருவாகியிருக்கிறது“மெய்ப்பட செய்” .
அப்பாவியான நான்கு இளைஞர்கள் கிராமத்திலிருந்து சென்னைக்கு சூழ்நிலையின் காரணமாக இடம் பெயர்கிறார்கள். பட்டணத்தில் நடைபெறும் பாலியல் அத்து மீறல்களை பொதுமக்கள் கண்டும் காணாமல் செல்வதைக் கண்டு, வெகுண்டு எழுந்து நியாயம் கேட்கிறார்கள்.
இதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனை என்ன? அதிலிருந்து அவர்களால் வெளியே வர இயன்றதா? என்பதே “மெய்ப்பட செய்” படத்தின் திரைக்கதை” என்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.