புதுக்குடியிருப்பு காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பகுதி மக்களை நேற்று (வியாழக்கிழமை) நேரில் சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக உள்ள பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனைக்குரிய காணி உள்ளிட்ட 49 பேருக்கு சொந்தமான காணியை விடுவிக்குமாறு கடந்த பெப்ரவரி மாதம் முதல் ஒரு மாதகாலமாக மக்கள் போராடடமொன்றை முன்னெடுத்திருந்த நிலையில் 19 ஏக்கர் கொண்ட குறித்த காணியை மூன்று கட்டங்களாக விடுவிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது.
இதற்கமைய முதல் கட்டமாக கடந்த மார்ச் 4ஆம் திகதி 20 பேருக்கு சொந்தமான 7.7 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது.
எனினும் மூன்று மாதங்களின் பின்னர் இரண்டாம் கட்டமாக 29 பேருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால், நான்கரை மாதங்கள் கடந்துள்ள போதிலும் குறித்த காணிகள் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.