புதிய பிரதமராக தெரீசா மேயை, ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்தார்
பக்கிங்காம் அரண்மனையில் நடந்த நிகழ்ச்சியில் பிரிட்டனின் புதிய பிரதமராக தெரீசா மேயை, ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்தார்.
ராணி எலிசபெத்தின் ஆட்சிக் காலத்தில் பிரதமராக பதவியேற்கும் 13வது நபர் தெரீசா மே என்பது குறிப்பிடத்தக்கது.
உள்துறை அமைச்சராக இருந்த தெரீசா மே, மார்க்கரெட் தாட்சருக்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெண் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார்.
ராணி எலிசபெத்தை சந்தித்த பிறகு, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10, டவ்னிங் தெருவுக்கு தனது கணவர் பிலிப்புடன் வந்த தெரீசா மே, அங்கு கூடியிருந்த சர்வதேச செய்தியாளர்களின் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது, தனது அரசு சலுகை படைத்த சிலருக்காக மட்டும் செயல்படாமல், சாதாரண மக்களுக்காகப் போராடும்.ஏழைகள், பெண்கள், இனச்சிறுபான்மையினர் மற்றும் இளையோருக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து தனது அரசு போராடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பிரதமராக டேவிட் கேமரனின் செயல்பாடுகளுக்கு அவர் புகழாரம் சூட்டினார். டேவிட் விட்டுச் சென்ற வழியில் தான் தொடர உள்ளதாகவும், அவர் பொருளாதார மேம்பாட்டுக்காக மட்டுமன்றி, சமூக நீதிக்காகப் போராடினார் என்றும் தெரீசா புகழ்ந்துள்ளார்.