ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி வேட்பாளர் விடயம் குறித்து ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது குழப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் ஐக்கிய கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும், சஜித்திற்கு பதிலாக தாம் அல்லது சபாநாயகர் கரு ஜயசூரியவை களமிறக்குவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்காரணமாக ஐக்கிய தேசியின் கட்சியின் தலைமை மீது கடும் அதிருப்தியுள்ள சஜித் பிரேமதாஸவை புதிய பிரதமராக நியமிப்பதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இன்று மாலை அல்லது நாளை மாலை சஜித் பிரேமதாஸ பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறிப்பாக ஹரீன் பெணான்டோ, அஜித் பீ பெரேரா, சுஜீவ சேனசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்குரிய நடவடிக்கைகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறானதொரு சூழலில் இலங்கையில் மீண்டும் ஒரு அரசியல் குழப்ப நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது கொண்ட அதிருப்தி காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ரணிலை பதவி நீக்கம் செய்து மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.