இலங்கை முதல் முறையாக அதி சக்தி வாய்ந்த தொழில்நுட்பத்துடன் கூடிய கம்பி இணைப்பின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட புதிய களனிப் பாலத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் நாளை திறந்து வைக்கவுள்ளனர்.
இந்தப் புதிய களனிப் பாலத்துக்கு ‘கல்யாணி தங்க நுழைவு’ எனப் பெயரிடப் பட்டுள்ளது. சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இந்த வைபவம் நடை பெறும் என பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பின்னர், கொழும்பு பிரதான நகரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கான வீதியும் இணைக்கப்பட்டால், கொழும்புக்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும்.
வாகனங்கள் அதிகரித்துள்ள நிலையில், தற்போதைய களனிப் பாலம் அதற்கு ஈடுகொடுக்க முடியாது என்பதால், 2014 ஆம் ஆண்டு புதிய களனி பாலத்தை நிர்மாணிக்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெருந்தெருக்கள் அமைச்சர் என்ற வகையில் அன்று உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருந்தார்.
கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் கொழும்பு நிறைவிடத்திலிருந்து பண்டாரநாயக்க சுற்று வட்டம் வரை 6 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தில் அங்கிருந்து ஒறுகொடவத்தை வரையும், இங்குறுகொட சந்தி வரையும், துறைமுக நுழை வாயில் வரையும் 4 வழித் தடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]