தான் புதிய கட்சி தொடங்கப்போவதாக ஊடகங்களில் வந்த செய்திகள் தவறானவை என்றும், அப்படியான எண்ணம் எதுவும் இல்லையென்றும் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ தினகரன் கூறினார்.
டி.டி.வி.தினகரன், புதிய கட்சி தொடங்கும் முடிவில் இருப்பதாக நேற்று ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில், எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி டி.டி.வி.தினகரன் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், “புதிய கட்சி தொடங்கும் அவசியம் இல்லை. அப்படி ஒரு செய்தி வருவதை நானே ஊடகங்கள் வழியாகத்தான் அறிந்துகொண்டேன். எம்.ஜி.ஆர் படங்களின் வில்லன்களைப்போல எங்களுக்குத் துரோகமிழைத்தவர்களிடம் கட்சியையும் இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒப்படைத்துள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க அம்மா அணி என்ற பெயரில்தான் போட்டியிடுவதாக இருந்தேன். ஆனால், அதற்குள் திடீரென தேர்தல் அறிவித்துவிட்டார்கள். உள்ளாட்சித் தேர்தல் வரும்போது, அ.தி.மு.க அம்மா அணி சார்பில் போட்டியிடுவோம். நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளோம். நீதிமன்றத்தின்மூலம் இரட்டை இலை சின்னத்தையும் கட்சியையும் மீட்டெடுப்போம். அ.தி.மு.க தொண்டர்களில் 90 சதவிகிதம் பேர் எங்களிடம்தான் இருக்கிறார்கள். ஆர்.கே.நகரில், கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி இறைத்தும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. மக்கள் எங்களைத்தான் ஆதரித்தனர். தேர்தல் வெற்றிக்குப் பின்னர், ஒவ்வொரு நிர்வாகியும் எங்களிடம் வருவார்கள். அவசியம் ஏற்பட்டால், புதிய கட்சி தொடங்குவது பற்றி யோசிக்கலாம்” என்றார்.