புதிய தேசிய இறைவரி சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் ஊடாக 45 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்கு கிடைக்கும். மேலும் மக்கள் மீது சுமத்தும் வற் வரியையும் 2 வீதத்தினால் குறைக்க முடியும்.
இதன்படி குறித்த சட்டமூலத்தின் அடிப்படை விடயதானங்கள் அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரும். எனினும் அடுத்த வருடத்தின் ஏப்ரல் மாதத்திலேயே பூரணமாக அமுல்ப்படுத்தப்படும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சபையில் தெரிவித்தார்.
அத்துடன் வருமான வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக அறவிடப்படும் தண்டபணங்களிலும் மாற்றங்கள் செய்யவுள்ளதுடன் அவர்களுக்கான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உள்நாட்டரசிறை சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
வருமான வரி அறவீட்டில் நேரடி வரி அறவீட்டினை விடவும் மறைமுக வரியே அதிகளவில் அறிவிடப்படுகின்றது. இது வரி அறிவீட்டு முறையில் பெரும் சவால்மிக்கதாக உள்ளது. 2006 ஆம் ஆண்டு இறைவரி சட்டமூலம் கொண்டுவரப்பட்டது. அதன்பின்னரான காலப்பகுதியில் இற்றை வரை 8 திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்வது மாத்திரம் போதுமானதாக அமையாது. புதிய சட்டமூலம் வேண்டும். இதனால் முதலீடுகளை பெறுவதிலும் பெரும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.நேரடி வரி குறைவாக காணப்படுகின்றமையினால் அவதானமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த தேசிய வருமானம் 2014 ஆம் ஆண்டு 10 வீதமாக காணப்பட்டது. எனினும் கடந்த 2 வருடத்தில் தேசிய வருமானத்தை 15 வீதமாக அதிகரித்துள்ளோம். அடுத்து வரும் காலங்களில் 20 வீதம் வரைக்கும் கொண்டு வருவதே எமது இலக்காகும். தற்போதைக்கு 82 சதவீதம் மறைமுக வரியாகவும் 18 சதவீதம் நேரடி வரியாகவும் அறவிடப்படுகின்றது. இதனால் பால்மா, சீனி கொள்வனவு செய்யும் சாதாரண மக்களே பாதிப்புக்குள்ளாகின்றனர். நேரடி வரி அறவீட்டில் நாம் பிராந்தியத்தில் இறுதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதன்படி மலேசியாவில் நேரடி வரியாக 72 வீதமும் , இந்தியாவில் 50 வீதமும், சிங்களப்பூரில் 45 வீதமும் பாகிஸ்தானில் 37 வீதமும், பங்களாதேஷில் 35 வீதமாக அறிவிடப்படுகின்றன. எனினும் இலங்கை நேரடி வரி வருமான அறவீட்டில் பலவீனம் அடைந்துள்ளது.
அத்துடன் சாதாரண வசதியடைந்தோரும் சாதாரண மக்களுக்கும் ஒரே அளவிலான சமாந்தரமான வரியையே செலுத்துகின்றனர். இது பெரும் அநியாயமாகும். இதன்படி நாம் இறைவரி சட்டமூலம் நிறைவேற்றுவதன் ஊடாக 2020 ஆம் ஆண்டாகும் போது நேரடி வரி வருமானத்தை 40 வீதமாகவும் அதிகரிக்கவும் மறைமுக வரியை 60 வீதமாக குறைக்கவும் முடியும்.
அதேபோன்று இலங்கையில் வருமான வரி செலுத்த தகுதியானவர்கள் உரிய வகையில் பதிவு செய்வதில்லை. இதன்படி 2016 ஆம் ஆண்டளவில் 43 ஆயிரத்து 990 நிறுவனங்களே வருமான வரி செலுத்துதவற்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று 1 இலட்சத்து 19 ஆயிரத்து 300 தனிநபர்கள் வரி செலுத்த பதிவாகியுள்ளனர். இது பெரும் குறைவாகும். எனினும் பதிவு செய்யப்பட்டுள்ள 43 ஆயிரத்து 990 நிறுவனங்களில் 30 சதவீத நிறுவனங்களே பூரண வரி செலுத்தியுள்ளன. அதேபோன்று தனிநபர்களில் 48 வீதத்தினரே வரி செலுத்தியுள்ளனர்.
புதிய தேசிய இறைவரி சட்டமூலம் நிறைவேற்றுவதின் ஊடாக 45 பில்லியன் ரூபா வருமானம் அரசாங்கத்திற்கு கிடைக்கும்.மேலும் வற் வரியை எம்மால் 2 சதவீதத்திற்கு குறைத்து கொள்ள முடியும். இதன்படி குறித்த சட்டமூலத்தின் அடிப்படை விடயதானங்கள் அடுத்த மாதம் முதல் அமுலுக்கு வரும். எனினும் அடுத்த வருடத்தின் ஏப்ரல் மாதத்திலேயே பூரணமாக அமுலுப்படுத்தப்படும்.
அத்துடன் வருமான வரி செலுத்தாதவர்களுக்கு எதிராக தண்டபணங்களிலும் மாற்றங்கள் செய்யவுள்ளதுடன் அவர்களுக்கான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளோம். வரி செலுத்தாதவர்கள் தொடர்பான வழக்கு தொடர்ந்தும் தாமதப்படுத்துவதினால் நாட்டின் பொருளாதாரத்திற்கே பாதிப்பாக அமையும். ஆகையால் வழக்குகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றார்.