புதிய இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு முத்தரப்பு போட்டி ஏற்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாது,
கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதை உறுதி செய்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன எதிர்வரும் 19ஆம் திகதி புதிய இடைக்கால ஜனாதிபதிக்கான வேட்புமனுக்கள் கோரப்படும் என்று அறிவித்ததோடு மறுநாள் 20 ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க கடமைகளை பொறுப்பேற்றுள்ள நிலையில் அவர் ஜனாதிபதி பதவியில் நீடிப்பதற்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இவ்வாறான நிலையில் அவருடைய கட்சியின் சார்பில் இன்னமும் தீர்மானம் எடுக்கப்படாத நிலையில் பொதுஜனபெரமுன பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு புதிய இடைக்கால ஜனாதிபதி தெரிவின் போது வாக்களிக்கவுள்ளதாக தீர்மானித்துள்ளோம் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவித்தலை கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் வெளியிட்டார்.
இதேவேளை, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், டலஸ் அழகப்பெருமமற்றும் ஏனைய தரப்பினருக்கு இடையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, டளஸ் அழகப்பெருமவை ஜனாதிபதி வேட்பாளராகவும் பாராளுமன்ற சம்பிரதாயங்களின் பிரகாரம் எதிர்க்கட்சித்தலைவரான சஜித் பிரேமதாச பிரதமராக தெரிவு செய்யப்படுவதற்கும் இணக்கபாடு எட்டப்பட்டிருந்தது.
ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி சஜித்பிரேமதாசவை தமது தரப்பு ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதென்று தீர்மானித்திருந்தபோதும் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் தமது தீர்மானத்தில் நெகிழ்வுத்தன்மையை கடைப்பிடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் அதன் பங்களிக்கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் சுயாதீன அணியினர் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலிலும் சஜித் பிரேமதாச தரப்பு ஜனாதிபதி பிரதமர் பதவி விடயங்களில் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடுகளுக்கு அமைவாக தாம் நெகிழ்த்தன்மையை கடைப்பிடிப்பதற்கு தயார் என்றே அறிவித்திருந்தது.
இருப்பினும் குறித்த கலந்துரையாடல் நிறைவடைந்து சொற்ப வேளையில் பொதுஜபெரமுனவிலிருந்து வெளியேறி சுயாதீன அணியில் இடம்பெற்றுள்ள டலஸ் அழகப்பெரும தான் ஜனாதிபதித் தெரிவுக்கான போட்டியில் களமிறங்கவுள்ளதாக அறிவித்தார்.
இதனையடுத்து அவசரமாக எதிர்க்கட்சி அலுவலகத்தில் கூடிய ஐக்கிய மக்கள் சக்தி சஜித் தலைமையில் தீவிரமான ஆலோசனைகளில் ஈடுபட்டது. தொடர்ந்து தமது அணி சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதென தீர்மானம் எடுத்தது.
இதன்போது “ஏமாற்றமடையும் தரப்பாக எதிர்க்கட்சி இருக்கமுடியாது” என்ற அடிப்படையிலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் வீரகேசரிக்கு தெரிவித்தார். அதேநேரம் தமிழ்முற்போக்கு கூட்டணியின் பங்காளிக்கட்சியின் தலைவரான வே.இராதாகிருஷ்ணனும் அதனை உறுதிப்படுத்தினார்.
இவ்வாறான நிலையில் தற்போது ஜனாதிபதி வேட்பாளருக்கு மூன்று வேட்பாளர்கள் களமிறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.