புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சியின் இடைநடுவில் நாம் உள்ளோம். தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதித்துவக் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் இருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் இந்தத் தேர்தலின் ஊடாகவும் எடுத்துக்காட்ட வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். சங்கானை, மாலு சந்தி, சாவகச்சேரி பிரதேசங்களில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்றும் இரா.சம்பந்தன் உரையாற்றியிருந்தார்.
இந்தக் கூட்டங்களில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
தமிழ் மக்களின் நீண்ட காலப் பிரச்சினையான இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சிகள் ஆட்சி மாற்றத்தின் பின்னர் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. புதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது. இந்த முயற்சியில் நாம் பாதி வழியில் நிற்கின்றோம். இந்தச் சூழலில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்கொள்கின்றோம்.
இந்தத் தேர்தலை இந்த நாடு மாத்திரம் அல்ல பன்னாட்டுச் சமூகமும் பார்த்துக் கொண்டிருக்கின்றது. தமிழ் மக்களின் ஏகப் பிரதிநித்துவக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் என்பதை தமிழ் மக்கள் இந்தத் தேர்தல் ஊடாகவும் வெளிக்காட்ட வேண்டும். இதனை செய்வதற்கு தமிழ் மக்கள் தவறக் கூடாது. அப்போதுதான் எம்மால், புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் முழுமையாக – பலத்துடன் பயணிக்க முடியும். எமது நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வையும் காண முடியும் – என்றார்.