புதிய அமைச்சரவையை நியமிப்பதற்குரிய நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சரவை மீதான இடைக்கால தடை தொடரும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை மீதான இடைக்கால தடையை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்த மனு மீதான வாதப்பிரதி வாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலேயே உயர் நீதிமன்றம் இவ்வாறு அறிவித்துள்ளது.
மஹிந்த தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க முடியாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் 16ஆம், 17ஆம், 18ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், அன்றைய தினம் குறித்த வழக்கினை ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் ஆராயுமாறு பிரதம நீதியரசருக்கு கடிதம் அனுப்பி ஆலோசனை பெறவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த தீர்ப்பு வெளியானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ சுமந்திரன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தவிர்ந்த மற்றுமொரு தரப்பினரை அமைச்சரவையில் நியமிக்குமாறும் அவர் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.