அமெரிக்காவில் மேரிலாந்து மாநிலத்தில் காரினுள் சானிடைசரையும், சிகரெட்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்திய ஒருவரின் கார் பற்றி எரிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காரின் முன்சீட்டில் அமர்ந்திருந்த வாகன சாரதி ஒருவர் புகைப்பிடித்துக்கொண்டே சானிடைசரைபயன்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தீ சிறிது நேரத்தில் கார் முழுவதும் பரவி பற்றி எரிந்துள்ளது.
இதனை பார்த்த அப்பகுதி மக்கள் 911 என்ற அவசர எண்ணை அழைத்து விபத்து குறித்து விவரத்தை கொடுத்த நிலையில், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
சரியான நேரத்தில் வெளியேற்றப்பட்ட வாகன சாரதிக்கு கை உள்ளிட்ட இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது,
“ காரில் ஏற்பட்ட தீ, சாரதி புகைப்பிடித்துக்கொண்டிருந்த போது சானிடைசரை பயன்படுத்தியதால் ஏற்பட்டது.
இவை கார் போன்ற காற்றோட்டமில்லாத இடத்தில் பயன்படுத்த கூடாத பொருட்கள்; அனைத்தும் நாசம்” என பதிவிட்டுள்ளார்.