புகைப்பட ஆதாரங்களுடன் இராணுவத்தின் பாலியல் வன்கொடுமைகள்! ஜெனீவாவில் அனல்பறக்கும் கேள்விகள்
ஐ.நாவிடம் புகைப்பட ஆதாரங்களுடன் கையளிக்கப்பட்ட இலங்கை இராணுவத்திற்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், உட்பட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் இராணுவ மயமாக்கல் தொடர்பில் இலங்கை மீது அனல்பறக்கும் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் பெண்களுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் சந்திராணி சேனாரத்ன தலைமையிலான குழுவினரிடம் ஐ.நா அதிகாரிகள் இந்த கடும் கேள்விகளை தொடுத்துள்ளனர்.
இதன்போது பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், பெண்கள் மீதான சித்திரவதைகள், சாட்சிகளை மூடிமறைத்ததாக ஐ.நா வினால் குற்றம் சாட்டப்படட அதிகாரிகளை நியமித்துள்ளமை தொடர்பிலும் ஐ.நா குழுவின் அதிகாரிகள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
பெண்களை கைது செய்து, தடுத்து வைத்து பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படும் ஆறு இராணுவ அதிகாரிகளின் விபரங்களை சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் நேற்று முன்தினம் சமர்ப்பித்திருந்தன.
இதில் முழு விபரங்களுடன் கூடிய ஆவணங்களுடன் இரகசியமான இணைப்பில் 6 புகைப்படங்களை உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து இன்றைய ஐ.நா அமர்விலேயே இலங்கைக்கு எதிராக பல கேள்விகள் எழுந்துள்ளன.