மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இவரது மந்திரி சபையில் கலாசார துறை மந்திரியாக இருப்பவர் உஷா தாகூர். இவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போதெல்லாம் பலர் இவருடன் புகைப்படம் எடுக்க முண்டியடித்துக் கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தன்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பும் நபர்கள் கட்சியின் வளர்ச்சி நிதிக்கு ரூ.100 நன்கொடை அளிக்க வேண்டும் என உஷா தாகூர் தெரிவித்துள்ளார்.
கண்ட்வா நகரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஆதரவாளர்கள் என்னுடன் புகைப்படங்களை எடுப்பதில் நிறைய நேரம் வீணடிக்கப்படுகிறது. இதனால் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் கால தாமதமாக கலந்து கொள்ள வேண்டியதாக உள்ளது. எனவே என்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பும் நபர்கள் பா.ஜ.க.வின் உள்ளூர் மண்டல கருவூலத்தில் ரூ.100 நன்கொடை அளிக்க வேண்டும்.
அனேக இடங்களில் மக்கள் மலர்களுடன் என்னை வரவேற்கின்றனர். பூக்களில் லட்சுமிதேவி வசிப்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே கறைபடாத விஷ்ணுவைத் தவிர வேறு எவராலும் பூக்களை ஏற்க முடியாது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியும் பூங்கொத்துக்கு பதிலாக புத்தகங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என தெரிவித்தார்.