பொதுச்சபை கூட்டத்தில் தவிசாளர் பதவிக்கு புதிய பெயர் பரிந்துரைக்கப்படாத நிலையில் உதுராவெல தம்மரதன தேரர் நியமிக்கப்பட்டார். ஜி.எல்.பீரிஸூக்கு எதிராக குற்றச்சாட்டுகள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. விலகிச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் இணையலாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் சனிக்கிழமை (22) இடம்பெற்ற கட்சியின் வருடாந்த பொதுச்சபை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
ஸ்ரீ லங்கா ஜாதிக பெரமுன என்ற கட்சி 2016 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்று பதிவு செய்யப்பட்டது.பேராசிரியர் ஜி.எல். பீரிஸை தவிசாளராக நியமிப்பதற்கு அதுவரை காலம் கட்சியின் தவிசாளராக பதவி வகித்த சிரேஷ்ட பேராசிரியர் உதுராவெல தம்மரதன தேரர் பதவி விலகினார்.
கருத்து வேறுபாடுகளினால் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை.2023 ஆம் ஆண்டு பொதுச்சபை கூட்டத்தின் போது புதிய தவிசாளர் ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.
பொதுச்சபை கூட்டத்தில் தவிசாளர் பதவிக்கு பிறிதொரு தரப்பினரது பெயர் பரிந்துரைக்கப்படவில்லை.சிரேஷ்ட பேராசிரியர் உதுராவெல தம்மரதன தேரரின் பெயர் பரிந்துரைக்கு கட்சியின் உறுப்பினர்கள் ஏகமனதாக இணக்கம் தெரிவித்தனர்.
பேராசிரியர் ஜி.எல் பீரிஸுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் ஏதும் முன்வைக்கப்படவில்லை. பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்றவர்கள் எம்முடன் மீண்டும் இணையலாம்.அரசியலில் நீண்ட கால எதிரியும் இல்லை,நிலையான நண்பனும் இல்லை என்றார்.