பிஹார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் விவகாரத்தில் நிதிஷ் குமார் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டால் அவருக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்க பாஜக தூது விட்டிருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ கடந்த 5-ம் தேதி ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கில் லாலுவின் இளைய மகனும் பிஹார் துணை முதல்வருமான தேஜஸ்வியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. ஊழல் வழக்கில் சிக்கிய பலரின் பதவியை நிதிஷ் குமார் இதற்கு முன் பறித்துள்ளதால், தேஜஸ்வியின் பதவியையும் அவர் பறிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக நிதிஷ் குமார் தனது ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் ஆலோ சனை நடத்தினார். இதையடுத்து தேஜஸ்வியை ராஜினாமா செய்யக் கோருவது என நிதிஷ் முடிவு எடுத் ததாகவும் இதை லாலுவிடம் தெரி வித்து விட்டதாகவும் கூறப்படு கிறது.
அதேசமயம் தேஜஸ்வியை நிதிஷ் குமார் பதவி நீக்கம் செய் தால், லாலு தனது ஆதரவை விலக் கிக்கொண்டு ஆட்சியை கவிழ்க் கலாம் என நிதிஷ் ஆதரவாளர்கள் அஞ்சுகின்றனர். இந்த அச்சத்தைப் போக்கும் வகையில் பாஜகவில் இருந்து நிதிஷுக்கு தூது விடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பாஜக மாநில நிர்வாகிகள் கூறும்போது, “நிதிஷ் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டால் நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதுதான் சரியாக இருக்கும். எங்கள் யோசனையை பாஜக தலைமையும் ஏற்கத் தயாராகி வருகிறது. இந்த தகவலை நிதிஷுக்கு பொது நண்பர்கள் மூலமாக தெரிவித்துவிட்டோம். தற்போதுள்ள சூழலில் தேஜஸ்வி பதவி இறக்கப்பட்டால் அது எங்களுக்கு அரசியல் லாபமாக அமையும். பதவி இறக்கப்படாவிட்டால், ஊழலை நிதிஷ் குமார் ஆதரிப்பதாக பிரச்சாரம் செய்வோம். அதுவும் எங்களுக்கு லாபமாகவே அமையும்” என்றனர்.
தேஜஸ்வி ராஜினாமா செய்ய மாட்டார் என ஆர்ஜேடி கட்சியினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில் தேஜஸ்வி விவகாரத்தில் நிதிஷ் குமாருடன் உறவை புதுப்பித்துக்கொள்ள பாஜக விரும்புகிறது. 2019 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் நிதிஷின் பங்கு காங்கிரஸை விட முக்கியமானதாக இருக்கும் என பாஜக கருதுகிறது. இதனால் மெகா கூட்டணியில் பிளவு ஏற்படுத்தி நிதிஷை மீண்டும் தங்கள் பக்கம் இழுக்க முயல்வதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே நிதிஷ் குமாரும் 2019 மக்களவைத் தேர்தலை தாண்டி பிஹாரில் தனது ஆட்சி நிலைப்பது குறித்தும் கவலைப்படுவதாக தெரியவந்துள்ளது.