நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் திங்கட்கிழமை(11) நள்ளிரவுடன் நிறைவடைந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால்(tmvp) ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் தடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால்(sivanesathurai santhirakanthan) குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அளிக்கப்பட்ட முறைப்பாடு
தேசிய ரீதியில் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சிறி லங்கா அமைப்பு மாவட்ட உதவி தேர்தல்கள் தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் தேர்தல் பிணக்குகள் தீர்க்கும் பிரிவுக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் தேர்தல்கள் திணைக்கள அதிகாரிகளினால் ஊடகவியலாளர் சந்திப்பு தடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் சட்டங்களுக்கு முரண்
தேர்தல்கள் சட்டங்களுக்கு முரணான வகையில் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்தே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு தடுத்து நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
